நெல் சாகுபடியில் விதை நேர்த்தியின் அவசியம் கோபி வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
உதவி இயக்குனர் தகவல்
தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் 2-ம் போக சாகுபடிக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்து, விதைப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களான குலை நோய், செம்புள்ளி நோய், இலை உறை கருகல் நோய் போன்ற நோய்களின் தாக்குதலில் இருந்து நெல் பயிரை காப்பாற்றலாம். விதை நேர்த்தி செய்வதால் நெல் நாற்றுகள் 40 நாட்கள் வரை நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு பயிரின் பின்பட்டத்தில் ஏற்படும் நோய் தாக்குதலையும் குறைக்கிறது.
மேலும் விதை நேர்த்தி செய்வதால் விதைகளின் முளைப்புத் தன்மை மேம்படுவதோடு நாற்றுக்களின் வீரியமும் அதிகரிக்கிறது. நெல் விதைகளை ஊற வைக்கும்போது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கார்பெண்டா சிம் அல்லது ஒரு கிராம் டிரைசைக்ளசோல் ஆகிய மருந்துகளில் ஒன்றை கலந்து அந்த கரைசலில் நெல் விதைகளை ஊற வைத்து பின் எப்போதும் போல முளைகட்டி நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இயற்கை முறையில் ரசாயன பூஞ்சான கொல்லி மருந்துகளுக்கு பதிலாக ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கலந்தும் விதை நேர்த்தி செய்யலாம். விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு லிட்டர் மருந்து கரைசல் தேவைப்படும். விதை நேர்த்தி செய்வதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. பயிரில் நோய் வந்த பின்பு மருந்து தெளிக்கும் செலவு மற்றும் சிரமம் ஆகியவற்றைப் பார்க்கும்போது விதை நேர்த்தி செய்வது மிகவும் எளிதானது. மேலும் இது சிக்கனமாகும். எனவே நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விதை நேர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.