மதுபான கடைகளில் காலிபாட்டில்களை பெறும் முறை அமல்

கொடைக்கானலில் உள்ள மதுபான கடைகளில் காலிப்பாட்டில்களை பெறும் முறை நேற்று முதல் அமலானது.

Update: 2022-06-15 16:39 GMT

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சாலையோரங்கள், நீரோடைகள் உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை சிலர் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், எனவே காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் முறையானது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், பண்ணைக்காடு, ஆடலூர், மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட 10 கிராம பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மதுப்பிரியர்களிடம் மதுபாட்டில் வாங்கும்போது கூடுதலாக ரூ.10 டாஸ்மாக் கடைகளில் வசூலிக்கப்பட்டது.

இந்த மதுபாட்டில்கள் மீது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை குறியீடு எண் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை வாங்கி செல்லும் மதுபிரியர்கள் மது அருந்திய பிறகு காலி மதுபாட்டில்களை மதுபாட்டில்கள் வாங்கி சென்ற கடைகளில் திரும்ப கொடுத்து ரூ.10-ஐ திரும்ப பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று கொடைக்கானலில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து ரூ.10 மதுப்பிரியர்கள் பெற்று சென்றனர். இது மது பிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

--------

Tags:    

மேலும் செய்திகள்