பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு காவலர்கள் பாலியல் வன்கொடுமை கொடுத்தது தொடர்பாக அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது:-
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவலர்கள் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அன்றைய தினமே 3 காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் உடனடியாக, மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.