போலீசாரை கண்டித்து குடியேறும் போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து மக்கள் சிலர் குடங்கள், பானைகளுடன் குடியேற முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-13 19:00 GMT

குடியேறும் போராட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இதில் 272 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் கதிரப்பன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் காமாட்சிபுரம் கிராம பகுதியை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் குடம், பானைகள், பாத்திரங்கள், போர்வை உள்ளிட்ட பொருட்களுடன் வந்து குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

போலீசார் சித்ரவதை

அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறும்போது, "போலீசார் திருட்டு வழக்குகளில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை என்ற பெயரில் அத்துமீறுகின்றனர். பொய் வழக்குகள் பதிவு செய்கின்றனர். கடந்த மாதம் 6-ந்தேதி திருப்பூரில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, திருப்பூர் போலீசார் எங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்து எங்கள் சமுதாயத்தை சேர்ந்த சிலரை சித்ரவதை செய்தனர். ஒருவர் திருட்டு வழக்கில் சிக்கினால் அந்த குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும்" என்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதித்தமிழர் கட்சி

ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில், கடமலை-மயிலை ஒன்றியம் மேலப்பட்டி கிராம மக்கள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "மேலப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்டகாலமாக பயன்படுத்திய பாதையை சிலர், கம்பி வேலி போட்டு அடைத்துள்ளனர். இதனால், மக்களுக்கு பாதை வசதி இல்லை. எனவே, பாதையை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே பொன்னம்மாள்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் கொடுத்த மனுவில், "ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்