கோவில்களில் குடமுழுக்கு

கும்பகோணம், சுவாமிமலை பகுதி கோவில்களில் நடைபெற்ற குடமுழுக்கில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-12 20:37 GMT

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் உள்ள சோழர்காலத்தில் கட்டப்பட்ட 1200 ஆண்டுகள் பழமையான நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. குடமுழுக்கை தொடர்ந்து கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றதால் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்து மாரியம்மன்

இதேபோல கும்பகோணம் பெருமாண்டி ஆட்டோ நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலிலும் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த 10-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜைகளோடு விழா தொடங்கியது. நேற்று காலை வரை 4 கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தன. பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கலசத்தை அடைந்து சிவாச்சாரியார்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

கபிஸ்தலம்


சுவாமிமலை அருகே நாகக்குடி பஞ்சராயன் தோப்பில் எழுந்தருளியிருக்கும் வாசுதேவர் சமேத வஞ்சனூர் மகா மாரியம்மன் கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக மகா சங்கல்பம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், யாக பூஜை, பூர்ணாகுதி, யாக சாலை பூஜைகள் ஆகியவை நடந்தன. தொடர்ந்து நேற்று காலை கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. மதியம் 12 மணி அளவில் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நாக்குடி பஞ்சராயன்தோப்பு பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்