ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
கிராம ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைத் தீர்ப்பதில் மக்களுடன் நேரடித் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியும், அதிகாரமும் வழங்காவிட்டால், அதன் நோக்கமே சிதைந்துவிடும்.
அண்மையில் ஊராட்சித் தலைவர்களுக்கு நிதியும், அதிகாரமும் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும்.
மேலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும். இந்த விவகாரத்தில் முதல்வரும் , நிதி அமைச்சரும் தலையிட்டு கிராம ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தில், பிறர் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.