சுற்றுலா பயணிகள் தேவைக்கு ஏற்ப ஏற்காட்டுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் போராட்டம்
சுற்றுலா பயணிகளுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை எனக்கூறி சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் ஏற்காட்டில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஏற்காட்டுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு பஸ்கள்
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மாதம் 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக தினமும் இயக்கப்படும் 12 பஸ்களுடன், கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சேர்வராயன் கோவில் விழாவிற்கு 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று முன்தினம் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற பள்ளி மாணவிகள் அதிகம் பேர் ஒரே நேரத்தில் 3 பஸ்களில் ஏறிக்கொண்டனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பஸ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மலை வழித்தடத்திற்கு அனுபவம் உள்ள டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கூடுதலாக இயக்க நடவடிக்கை
சேலம் மற்றும் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து குழு சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பள்ளி விடுமுறை முடியும் வரை தினமும் 4 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.