டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மது விற்பனையா? ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-06 23:56 GMT

சென்னை,

கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி வாக்களித்த தமிழக மக்களை எல்லா வகைகளிலும் வஞ்சிக்கலாம் என்று மின் கட்டண உயர்வு, வீட்டு வரி மற்றும் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல்வேறு வரி மற்றும் கட்டண சுமைகளை, வாக்களித்த மக்கள் மீது நேரடியாக சுமத்தி உள்ளது தி.மு.க. அரசு.

கடந்த மே மாதம், தஞ்சையில் சட்டவிரோத பார் ஒன்றில் தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் மது அருந்திய குப்புசாமி (வயது 68) மற்றும் விவேக் (36) ஆகிய 2 மீன் வியாபாரிகள் அரசு மருத்துவமனைகளில் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் சயனைடு அருந்தியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் சயனைடு உட்கொண்டவுடன் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இருவருடைய உடற்கூறாய்வை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடத்த நான் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அரசு கேளாகாதினராய் இருந்தது.

கள்ளச்சாராயம்

மேற்கண்ட 2 மரணங்களும் சட்டவிரோத பார்களினால் ஏற்பட்ட நிலையில், 3 நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் இறந்துள்ளார். இவருடன் மது அருந்திய 16 வயது சிறுவன் உள்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த சோதனை நடவடிக்கைகள் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரு சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுதல்; அப்பாவி மக்களின் நிலத்தை பறிப்பது; அமைச்சர் பதவியை பயன்படுத்தி விஞ்ஞான முறையில் கோடிகளை சுருட்டுதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு இருந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணம் சில லட்சங்களை வீசி அவர்களது வாயை அடைத்து விடலாம் என்ற மனப்பான்மையை முதல்-அமைச்சர் ஸ்டாலினுடைய செயல்பாடுகள் மூலம் உணர முடிகிறது.

கடும் நடவடிக்கை

கடந்த `மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 22 பேருக்கு மேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, முக்கிய தி.மு.க. நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக போலீஸ் துறை 2 ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

சட்ட விரோத மது பார்கள் மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும், சட்ட விரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வணிக வரித்துறை அதிகாரிகள் எப்படி தனியார் வணிக நிறுவனங்களை அடிக்கடி ஆய்வு செய்கிறார்களோ, அதுபோல் டாஸ்மாக் கடைகளிலும் கலால் முத்திரை உள்ள மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை, கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என்றும்; தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்