சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை (அ.தி.மு.க. ஆட்சியில்) போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
சம்மன்
இதற்கிடையே இந்த மோசடியின் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இடைக்கால தடை
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நடந்தது ப் போது செந்தில்பாலாஜி தரப்பில், மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், வக்கீல் பரணிகுமார் ஆகியோர் ஆஜராகி 'சென்னை குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணைக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது' என வாதிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
ரத்து
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர்.
அதில், அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்துசெய்வதாக கூறியுள்ளனர்.