அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் கடலூரில் நடந்த கூட்டத்தில் ஐ.ஜி.சம்பத்குமார் பேச்சு
அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஐ.ஜி.சம்பத்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் 137-வது மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சென்னகேசவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சத்தியேந்திரன், பொருளாளர் சதீஷ், கடலூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஐ.ஜி.சம்பத்குமார் கலந்து கொண்டு பேசுகையில், காவல்துறை நிர்வாகத்தில் அமைச்சு பணியாளர்களின் பணி மிக முக்கியமானது. இந்த ஆலமரத்தை தாங்கி பிடிக்கும் வேர் போன்றவர்கள் நீங்கள். அமைச்சு பணியாளர்களின் நலனை காத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை பணி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டபேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய பதவிகள் உருவாக்கம்
அதன் அடிப்படையில் 1132 தகவல் பதிவு உதவியாளர்கள் மற்றும் வரவேற்பாளர்கள் பதவிகளை புதிதாக உருவாக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பணியின்போது உயிரிழந்த அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்பட்டு, அவர்கள் காவல்துறையில் தகவல் பதிவு உதவியாளராகவும் காவல் நிலைய வரவேற்பாளராகவும் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் அமைச்சு பணியாளர்களின் சங்கம் முன் வைத்துள்ள கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து தேவையானவற்றை பூர்த்தி செய்து தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட இளநிலை உதவியாளர் தங்கராஜ் பணியின் போது இறந்ததால், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இதில் மணமகிழ் மன்ற செயலாளர் ஜெஸி, தமிழ்வாணன், முருகன் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.