வேலை தருவதாக குறுஞ்செய்தி வந்தால் போலீசை அணுகுங்கள்

வேலை தருவதாக குறுஞ்செய்தி வந்தால் போலீசை அணுகுங்கள் என்று காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2023-06-28 21:56 GMT

நாகர்கோவில்:

வேலை தருவதாக குறுஞ்செய்தி வந்தால் போலீசை அணுகுங்கள் என்று காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை கூறியுள்ளார்.

நூதன குற்றங்கள்

நாட்டில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய பிறகு அதற்கு ஏற்றாா் போல நூதன குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தற்போது வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. எங்கோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். உங்களுக்கு வேலை வேண்டுமா? இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் இருக்கும்.

இதைப் பார்க்கும் சம்பந்தப்பட்ட செல்போன் உரிமையாளர் வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அந்த குறுஞ்செய்தியில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசுவார். அப்போது இந்த ஆவணம் கொடுங்கள், அந்த ஆவணம் கொடுங்கள் என்று நம்மை நம்ப வைப்பது போலவே பேசுவார்கள். பின்னர் பணிநியமன ஆணை வந்துவிட்டது ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பல லட்சங்களை வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பி விடுவார்கள். இதுபோன்ற நூதன மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விழிப்புணர்வு குறும்படம்

எனவே இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

அந்த குறும்படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சீர் நடித்துள்ளார். வேலைக்கு ஆசைப்பட்டு மோசடி கும்பலிடம் சிக்கி பெண் ஒருவர் பணத்தை இழந்து கடைசியில் போலீசிடம் வந்து புகார் அளிப்பது போன்று அந்த விழிப்புணர்வு குறும்படம் உள்ளது. அவ்வாறு ஏமாற்றப்படுபவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல், மோசடி கும்பல் குறித்த அனைத்து தகவல்களையும் போலீசாருக்கு கொடுப்பது தான் என்று கூறி அந்த குறும்படம் முடிகிறது.

ஆராய வேண்டும்

குறும்படத்தின் முடிவில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசுகிறார். அதாவது 7.02 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படத்தில் 5 நிமிடங்கள் விழிப்புணர்வு காட்சிகள் வருகிறது. மீதமுள்ள நிமிடங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசுகிறார்.

அப்போது அவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் தற்போது சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் மனுக்கள் அதிகளவில் வருகின்றன. பொதுமக்கள் அனைவரிடமும் செல்போன் உள்ளது. சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளார்கள். அந்த சமூக வலைத்தள கணக்குகளை மோசடி நபர்கள் ஆய்வு செய்வார்கள். அதன்மூலம் நமக்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்வார்கள்.

எனவே, எந்த விதமான லிங்க் வந்தாலும் அதை நன்கு ஆராய வேண்டும்.

லோன் தருவதாக...

வேலைவாய்ப்பு மற்றும் லோன் தருவதாக குறுஞ்செய்தி வந்தால் அது உண்மைதானா? என சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தெரிவித்து விசாரித்துக் கொள்ளுங்கள். இல்லை எனில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதில் பணம் இழப்பு ஏற்பட்டு உள்ளதை தெரிவித்தால் போலீஸ் சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரத்தில் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்