பாலியல் தொடர்பான புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

வேலூர் மாநகராட்சியில் பாலியல் தொடர்பான புகார்கள் இருந்தால் தயக்கமின்றி தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கமிஷனர் ரத்தினசாமி தெரிவித்தார்.

Update: 2023-06-07 12:17 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக ஆலோசகர் விஜயலட்சுமி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டம் பணியிடங்களில் பெண்களை காக்கும் சட்டமாக திகழ்கிறது.

புகார் தெரிவிக்கலாம்

வேலூர் மாநகராட்சியில் பாலியல் பிரச்சினை தொடர்பாக புகார்கள் இருந்தால் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இங்கு பெண் உயர் அதிகாரிகள் பலர் உள்ளனர். மாநகராட்சி மேயரும் பெண் தான். எனவே தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.

இந்த விழிப்புணர்வு பயிற்சியில் கற்றுக்கொண்டதை உங்களது நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சியாளர் ஜெயசந்திரன் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம் குறித்து விளக்கி கூறினார். முடிவில் பாதாள சாக்கடை திட்டக்குழு தலைவர் தினகரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தகவல் பலகை வெளியிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்