பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தால்30 நிமிடத்துக்குள் தடையில்லா சான்று வழங்கப்படும்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Update: 2023-01-23 19:30 GMT

பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் 30 நிமிடத்துக்குள் தடையில்லா சான்று வழங்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.

தடையில்லா சான்று

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

தேர்தல் பிரசாரம், ஊர்வலம் நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒற்றை சாரள முறையில் அனுமதி மனு வழங்க வேண்டும். அந்த மனு ஆன்லைன் மூலமாக போலீசாருக்கு பரிந்துரைக்கப்படும். மனு பெறப்பட்ட 30 நிமிடங்களுக்குள் தடையில்லா சான்று வழங்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் மேடை பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சியினர் வேறுஇடம் வேண்டும் என்று கேட்டால் பரிசீலிக்கப்படும். ஒரே இடம் வேண்டுமென்று ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கேட்டால், யார் முதலில் அனுமதி கேட்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அறிவிப்பு பலகை

வாகனங்கள், பொதுக்கூட்டத்துக்கும் போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படாது. தடையில்லா சான்று மட்டுமே வழங்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரிதான் அனுமதி வழங்க முடியும். அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது எங்கு தொடங்கப்பட்டு, எங்கு முடியும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அந்த இடத்தை தவிர வேறு இடத்தில் பிரசாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி வழங்கப்பட்ட மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட விவரங்கள் போலீஸ் நிலையத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்