சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டம்-மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி

சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டம்-மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி

Update: 2022-07-23 18:08 GMT

சிவகாசி

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் நேற்று காலை சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகாசி மாநகராட்சிக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்று இங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டேன். இதுவரை சுமார் ரூ.10 கோடி மட்டும் தான் ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிதியை கொண்டு இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாது. தொடர்ந்து சிவகாசி மாநகராட்சியை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது தான் இந்த பணி தொடங்கி உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும். இதற்கான அனைத்து நடவடிக்கையை அசோகன் எம்.எல்.ஏ. செய்து வருகிறார்.

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஸ்கோயல் உத்தரவாதம் கொடுத்தார். அதன்படி வருகிற செப்டம்பர் 21-ந்தேதிக்குள் கொல்லம் ரெயில் சிவகாசியில் நிற்கவில்லை என்றால் என் தலைமையில் அசோகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் பொதுமக்களை திரட்டி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் சேர்மத்துரை, ஜி.பி. முருகன், பைபாஸ் வைரக்குமார் மற்றும் பலர் இருந்தனர்.

முன்னதாக சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர், விஸ்வநத்தம் ஆகிய பஞ்சாயத்து பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, விஸ்வநத்தம் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் நாகராஜ், திலிபன் மஞ்சுநாத் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்