பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் வழக்கு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-18 18:13 GMT

செய்யாறு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நேற்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். துணை முதல்வர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், அமுல்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

படிப்பில் முழு கவனம்

பெருமைமிக்க இக்கல்லூரியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறீர்கள். உங்களின் பெற்றோர்கள் பெரிய கனவுகளுடன் கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

குடும்ப சூழ்நிலை, உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி, கல்லூரி பருவத்தில் கல்வி கற்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் புகார் அளித்தால் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

வழக்குப்பதிவு

கல்லூரி நிர்வாகமே புகார் அளிக்காமல் விட்டு விட்டாலும் பொதுமக்கள் புகார் பெயரிலோ, ஏன் காவல்துறையே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததாக ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறை தண்டனை என்ற நிலைக்கு செல்லக்கூடும்.

அவ்வாறு வழக்குப்பதிவு செய்யும்போது கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும்.

இதனை கருத்தில் கொண்டு கல்லூரி பருவத்தில் இது போன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். இனிமேல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரிக்க உள்ளோம். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்