சமூகவிரோதிகளிடம் தொடர்பு வைத்திருந்தால் மிகக்கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் எச்சரிக்கை

சமூகவிரோதிகளிடம் தொடர்பு வைத்திருப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-17 18:45 GMT


திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் போலீஸ் நிலையங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் போலீஸ் நிலையங்களுக்கு நேற்று, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் திடீரென நேரில் வருகை தந்து, ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்படுகிறதா? என்பதையும் விசாரித்தார்.

அப்போது, புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு மட்டுமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

பாரபட்சம் இல்லாமல் கைது

மேலும், சாராயம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில், போலீசார் தீவிரமாக செயல்பட்டு சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மது, சாராயம், லாட்டரி விற்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, ஒவ்வொரு வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், நின்றுவிடாமல் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் வழக்குகள் அனைத்தும் காலதாமதம் ஏற்படாத வகையில் போலீசாரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். சாட்சிகளை ஆஜர்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

திருக்கோவிலூரில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைப்பதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார்.

எச்சரிக்கை

அதோடு, சமூகவிரோதிகளிடம் யாரேனும் தொடர்பு வைத்திருப்பதாக புகார் ஏதேனும் வந்தால், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசாரை அவர் எச்சரிக்கை செய்தார்.

ஆய்வின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருக்கோவிலூர் பாபு, சித்ரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருக்கோவிலூர் சதீஷ்குமார், ராஜசேகரன், செல்வம், சித்ரா, அரகண்டநல்லூர் அன்பழகன், லியோனி சார்லஸ், கண்டாச்சிபுரம் குருபரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்