மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் கடும் நடவடிக்கை

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-09-04 19:46 GMT

விழிப்புணர்வு பேரணி

கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது பீச்ரோடு வழியாக சென்று வந்தது. இதில் மாநகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு பள்ளியை தூய்மையாக பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது

முன்னதாக கலெக்டர் பேசுகையில், கடின உழைப்பால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். படிக்காமல் 10 பேர் முன்னேறி இருக்கலாம். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் படிக்காமல் இருக்கக்கூடாது. படிப்பு தான் அனைவரையும் வாழ்க்கையில் உயர்த்தும். மேலும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வரக்கூடாது. செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடும்ப சூழ்நிலையை காரணம் கூறி யாரும் படிக்காமல் இருக்க கூடாது.

மேலும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆசிரியர்களும் கடினமாக உழைக்க வேண்டும். இது தொடர்பாக வாரந்தோறும் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்தப்படும். எந்த பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைகிறதோ அந்த பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவா்களுக்கு விருது

மேலும் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' திட்டத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஆய்வு செய்திடவும் மாவட்ட அளவில், வட்டார அளவில் மற்றும் பள்ளி அளவில் மூன்றடுக்கு குழுக்கள் அமைத்திடவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு செயல்பாடு என நிர்ணயம் செய்திடவும் வழிக்காட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளை பாராட்டும் வகையில் மாவட்ட அளவில் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" விருதும், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு "இயற்கை நட்சத்திரம்" விருதும், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு "சிறந்த இயற்கை துணைவன் ஆசிரியர்" விருதும் வழங்கப்பட உள்ளது என்றார்.

இதில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வேணுகோபாலபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்