ஊழலற்ற ஆட்சியை கொடுக்காவிட்டால் தி.மு.க. ஆட்சி நீண்டநாள் நீடிக்காது

ஊழலற்ற ஆட்சியை கொடுக்காவிட்டால் தி.மு.க. ஆட்சி நீண்டநாள் நீடிக்காது

Update: 2022-06-26 17:16 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராமஜெயக்குமார், பாண்டியன், சத்யநாராயணன், மாவட்ட பொருளாளர் சுகுமார், நகர தலைவர் வடிவேல் பழனி, ஆரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் தாஸசத்யன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அவரவர்கள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பாரதீய ஜனதா கட்சி தலையிடாது. தி.மு.க. ஓராண்டு காலத்தில் எவ்வளவோ சாதனைகளை செய்துள்ளதாக கூறுகிறார்கள். என்ன சாதனை செய்தார்கள் என்று தெரியவில்லை. மக்களை ஏமாற்றுகிற மோசடி திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து விட்டனர். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். அந்த தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் தருவோம் என்றார்கள், ஓராண்டு காலம் முடிந்து விட்டது, அவர்கள் ஏன் கொடுக்க மறுக்கிறார்கள். இன்றைக்கு எல்லாத்துறையிலும் ஊழல் நடந்து வருகிறது. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சியை தி.மு.க. கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை கொடுக்காவிட்டால் தி.மு.க. ஆட்சி நீண்டநாள் நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்