பிரிந்து சென்றவர்கள் தவறுகளை உணர்ந்து, மன்னிப்பு கேட்டால் அ.தி.மு.க. மறுவாழ்வு அளிக்கும்- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தவறுகளை உணர்ந்து, மன்னிப்பு கேட்டால் அ.தி.மு.க. மறுவாழ்வு அளிக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தவறுகளை உணர்ந்து, மன்னிப்பு கேட்டால் அ.தி.மு.க. மறுவாழ்வு அளிக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
பூத் கமிட்டி கூட்டம்
தமிழகத்தில் உள்ள சட்டசபை வாரியாக பூத் கமிட்டி கூட்டம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் கூட்டமாக, மதுரை கிழக்கு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி பூத் கமிட்டி கூட்டம், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள எம்.ஆர்.சி.மகாலில் நேற்று நடந்தது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் கலந்து கொண்டனர். புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் சட்டசபையின் பூத் கமிட்டி கூட்டமே, இங்கு மாநாடு போல் நடந்து கொண்டு இருக்கிறது. இது தான் அ.தி.மு.க.வின் பலம். நமது தொண்டர்களின் பலம். அ.தி.மு.க.வினர் எழுச்சியாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தொண்டர்களும், மக்களும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
மன்னிப்பு கடிதம் கொடுத்தால்
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலங்களில் பல இன்னல்களை சந்தித்தது. அந்த இன்னல்களை அவர்கள் சாதனைகளாக மாற்றி ஆட்சி அரியணையில் ஏறி, மக்களுக்கு பணியாற்றினார்கள். அது போல எடப்பாடி பழனிசாமியும், சோதனைகளை எல்லாம் கடந்து சாதனை படைப்பார்.
ஜெயலலிதா காலத்தில் தவறு செய்தவர்கள், உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது. தவறு செய்தவர்கள், தங்களது தவறை உணர்ந்து ஜெயலிதாவிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். அதே போல் தற்போதும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க வேண்டும். அதனை எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து உரிய முடிவெடுப்பார்.
அமோக வெற்றி
தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது. மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் தி.மு.க.வை நம்பி ஏமாந்து போய் விட்டனர். மக்கள் அனைவரும் தி.மு.க. ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். இது வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
அதே போல் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார். அவர் தான் அடுத்த தமிழக முதல்-அமைச்சர் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.
அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தல் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அ.தி.மு.க.வின் முதல் பூத் கமிட்டி கூட்டம், இந்த திருப்பரகுன்றம் கூட்டம் தான். இது அ.தி.மு.க. வெற்றிக்கான தொடக்க கூட்டம். அ.தி.மு.க.வின் வெற்றி இந்த திருப்பரங்குன்றத்தில் இருந்து தொடங்கும். அதற்காக நாம் அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.