ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம்: முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

அமராவதி ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-09 18:25 GMT

நீர்மாசு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று அ.தி.மு.க. சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, பள்ளபாளையம், அப்பிபாளையம், தாளப்பட்டி, கருப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ள அமராவதி ஆற்று குடிநீர் கிணறுகளில் நீர்மாசு அடைந்துள்ளது. அமராவதி ஆற்றின், துணை நதியான குடகனாற்றில் மழை பெய்து வெள்ளம் வரும்போது திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் மற்றும் இதர தொழிற்சாலைகளின் கழிவை திறந்துவிட்டு, அந்த கழிவுநீர் குடகனாற்றில் வழியாக அமராவதி ஆற்றில் கலந்த காரணத்தால் மேற்கண்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு மிகவும் மோசமாக மாசடைந்து விட்டது.

குடிநீர் கிணறுகள்

அந்த கழிவுநீர் பாதிப்பால் அமராவதி ஆற்றில் உள்ள ஆண்டாங்கோவில் தடுப்பணையில் உள்ள மீன்கள் அனைத்தும் இறந்துவிட்டது. இதனால் ஊராட்சிகளுக்கு நீர்யேற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள நீரும் மாசடைந்து விட்டன. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உண்ணாவிரதம்

விரைவில் ஆற்றில் கழிவுநீரை கலப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அமராவதி மற்றும் குடகனாற்றின் நீர்வளத்தை காத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், தோல் கழிவுகள், சோப்பு கழிவுகள் அமராவதி ஆற்றில் கலக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும். இதேபோன்று தொடர்ந்து நடந்தால் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை செய்கிறோம், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்