தை பிறந்தால் வழி பிறக்கும்... தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும் - ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து
மனங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என நாம் அனைவரும் இந்த நாளில் இறைவனைப் பிரார்த்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழர் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள், இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள் என பல பெயரிட்டு அழைக்கப்படும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி, மத வேறுபாடுகளை கடந்து, சமத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை உணர்த்தும் விதத்தில், புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பொங்கும்போது "பொங்கலோ பொங்கல்" எனக்கூறி பக்தியுடன் இறைவனை வணங்கிக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் உழவர்கள். இத்தகைய இன்றியமையாத் தன்மை வாய்ந்த உழவர்களின் வருமானம் உயரட்டும், வாழ்வாதாரம் செழிக்கட்டும், மனங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என நாம் அனைவரும் இந்த நாளில் இறைவனைப் பிரார்த்திப்போம்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழிக்கேற்ப, தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும். இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும் என்று வாழ்த்தி, எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.