"பிரதமர் மோடி ேபாட்டியிட்டால் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம்"-கே.எஸ்.அழகிரி பேட்டி
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக கே.ஆர்.ராமசாமியை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தொண்டி,
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக கே.ஆர்.ராமசாமியை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
ஜனநாயக விரோத செயல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சட்டமன்ற தொகுதி அளவிலான காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேசினார். தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடியை அதிபராக்க இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இவர்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றத்தை கூட்டி இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள். தன்னை அதிபராக முடிசூட்டிக் கொள்ள நரேந்திர மோடி செய்யும் ஜனநாயக துரோகச் செயல் இது. இதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் என்பது இன்றைய சூழலில் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. தமிழ்நாடு, கேரளா போன்ற இன்னும் சில மாநிலங்களில் மாநில அரசு வந்து 2½ ஆண்டுகளுக்கும் குறைவாகத்தான் ஆகிறது. அதற்குள் அந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை மீண்டும் நடத்த முடியுமா? இது எப்படி சாத்தியமாகும்? சரி அப்படியே நடத்தினாலும் தேர்ந்தெடுக்கப்படுகிற மாநில அரசு கவிழ்ந்து விட்டால் அப்புறம் 5 ஆண்டுகள் கழித்துதான் மறுதேர்தல் நடத்துவார்களா? நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நடைபெறும் வரை அந்த மாநிலத்தில் கவர்னர் ஆட்சிதான் இருக்குமா? இதை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?
ராமநாதபுரம்
இந்தியா என்பது கூட்டாட்சி முறை உள்ள நாடு. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் அந்தந்த சட்டமன்றங்களில் இதனைப் பேசி விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தாமல் தேர்தல் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொன்னால் அதற்கு பெயர்தான் சர்வாதிகாரம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நரேந்திர மோடி போட்டியிடுவதாக கூறுவது வீண் வதந்தி. அவர் ஒருபோதும் தமிழ்நாட்டில் போட்டியிடமாட்டார். அவரால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. அப்படியே அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியை நிறுத்தி மோடியை வீழ்த்தி, நாங்கள் வெற்றி பெறுவோம்.
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் தி.மு.க. சேராவிட்டால் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று சீமான் கூறுவது தன்னை பெரிய மனிதராக காட்டிக்கொள்ளும் முயற்சி.. இதை எப்படி தி.மு.க. ஏற்கும். தி.மு.க.விற்கு தெரியாதா அவர் யார், அவருடைய பலம் என்ன என்று?
இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்
சனாதனம் விவகாரத்தை இந்துக்களுக்கு எதிரானது என்று சொல்ல முடியாது. நாங்கள் தான் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள், பாதுகாப்பானவர்கள். இந்து மதத்தின் பெயரால் பா.ஜனதாவினர் தவறு செய்கிறார்கள்.
இந்தியாவில் இந்துக்களின் வாக்கு எங்களுக்குதான் அதிகம் உள்ளது. தி.மு.க. ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. தி.மு.க.வின் தலைவராக இருந்த அறிஞர் அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று தான் கூறினார். அதைத்தான் இன்றைய தி.மு.க. இளம் தலைவர் உதயநிதியும் கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, கருமாணிக்கம் எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் எஸ்,சி, எஸ்,டி, பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், அகில இந்திய காங்கிரஸ் மீனவர் பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங், திருவாடானை வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.