சேலம் மாநகரில் மக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல்-போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை

சேலத்தில் மக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி எச்சரித்துள்ளார்.

Update: 2023-02-16 21:28 GMT

கார் பறிமுதல்

சேலம் மணக்காட்டில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பள்ளிக்கூடம் அருகில் சாலையில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கார் யாருடையது? என்று அங்கு வசித்தவர்களிடம் போலீசார் கேட்டனர்.

ஆனால் அந்த கார் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து மீட்பு வாகனம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தி கொண்டுசென்றனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு

சேலம் மாநகரில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு நிறுத்தினால் வாகனங்களை போலீஸ் துறை மூலம் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். சேலம்மாநகரை பொறுத்தவரையில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கார், லாரி, ஆட்டோ, சரக்கு வாகனம் போன்ற வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி எடுத்து செல்லும் செலவு தொகையும் அவர்களிடமே வசூலிக்கப்படும். எனவே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் போலீஸ்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்