'எனது மகன் தவறு செய்தால் அடித்து திருத்துங்கள்' -சிறுவனை பள்ளியில் சேர்க்கும்போதே பிரம்பை ஆசிரியரிடம் வழங்கிய பெற்றோர்
‘எனது மகன் தவறு செய்தால் அடித்து திருத்துங்கள்’ என்று சிறுவனை பள்ளியில் சேர்க்கும்போதே பிரம்பை ஆசிரியரிடம் பெற்றோர் வழங்கினர்
பகலில் வீட்டில் இருப்பதைவிட பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்கள் அதிக நேரம் இருக்கிறார்கள். மாணவர்களை லேசாக அடித்துவிட்டாலே அதை பெரிய விவகாரமாக்கி விடுகிறார்கள் என்றும், அதனாலேயே சிறுவயதில் மாணவர்கள் செய்யும் சில தவறுகளை திருத்த முடிவதில்லை என்றும், சமுதாயத்தில் ஒழுக்கமானவர்கள் உருவாக ஆசிரியர்கள் கையில் பிரம்பு எடுப்பதில் தவறில்லை என்ற கருத்து பரவலாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.்
இந்த நிலையில் தனது குழந்தையின் எதிர்காலம் நல்ல நிைலயை அடைய ஆசிரியர் அடித்தால் பரவாயில்லை என மதுரையை சேர்ந்த ஒரு பெற்றோர் உறுதிமொழி பத்திரம் பள்ளியில் வழங்கி இருக்கிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களது 4 வயது மகன் சக்தி. அவனை செல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மனோகரா நடுநிலைப்பள்ளியில் யு.கே.ஜி.யில் சேர்த்தனர். அப்போது 4 அடி உயரமுள்ள பிரம்பை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கி, ஒரு உறுதிமொழி மனுவையும் கொடுத்தனர். அந்த மனுவில், தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து சங்கரபாண்டியன் கூறும் போது, தற்போது பள்ளிக்கூடத்தில், மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதில்லை. இதனால் பல மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள். எனவே தவறு செய்யும் மாணவர்களை ஒரு தந்தையை போல அடித்து ஆசிரியர் திருத்தினால்தான் அவர்களுடைய எதிர்காலம் நல்லதாக அமையும். எனது மகன் எதிர்காலம் நலமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் 4 அடி நீள பிரம்புடன், உறுதிமொழி பத்திரத்தையும் கொடுத்து உள்ளேன், என்றார். இதுசம்பந்தமான வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது.