சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்

சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்

Update: 2023-05-18 18:45 GMT

நாகை மாவட்டத்தில் சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.

சோதனை சாவடிகளில் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிமாநில சாராயம் கடத்தலை தடுக்க 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாராயம் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் நேற்று நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மதுவிலக்கு சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனிப்படை அமைப்பு

நாகை மாவட்டத்தில் மதுகடத்தல் மற்றும் சாராயம் கடத்தலை தடுக்க ஏற்கனவே இயங்கி வரும் சோதனை சாவடிகளுடன் 10 தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடிகளில் இரவு, பகலாக போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் விற்பனை செய்வோர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டர் சட்டம் பாயும்

சாராயம் விற்பனை செய்வோர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர்களுக்கு உறுதுணையாக செயல்படுவோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்