பறவைகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளது. இங்கு வரும் பறவைகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை வழங்கப்படும் என வனசரக அலுவலர் அயூப்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரியாப்பட்டினம்:
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளது. இங்கு வரும் பறவைகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை வழங்கப்படும் என வனசரக அலுவலர் அயூப்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பறவைகள் சீசன் தொடக்கம்
வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டு தோறும் இந்த சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும். இந்த ஆண்டு சரணாலயத்துக்கு பறவைகள் வரும் சீசன் தொடங்கி உள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.
இந்த பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சரக வனப் பணியாளர்கள் வேதாரண்யம் வன உயிரின சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்டையாடினால் நடவடிக்கை
இந்த நிலையில் பறவைகளை வேட்டையாடுதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி 3 ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ? அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
பறவைகளை வேட்டையாடுபவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும். தகவல் கொடுப்பவர்கள் பெயர்கள் ரகசியம் காக்கப்படும்.
ஆலிவ்ரெட்லி ஆமைகள்
கடலோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட அரிய வகை இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகள், டால்பின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ளதால் கடற்கரையோர பகுதிக்கு வரும் அவைகளை துன்புறுத்தாமலும் மீனவர்களின் வலையில் சிக்கினால் பாதுகாப்பாக காயம் இன்றி மீட்டு மீண்டும் கடலில் விட வேண்டும்.
ஆமை முட்டைகளை திருட்டுத்தனமாக சேகரம் செய்பவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.