ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைப்பு தந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்

ஆட்டோ டிைரவர்கள் ஒத்துழைப்பு தந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என துணை சூப்பிரண்டு கூறினார்.

Update: 2023-08-07 22:19 GMT

ராஜபாளையம்,

ஆட்டோ டிைரவர்கள் ஒத்துழைப்பு தந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என துணை சூப்பிரண்டு கூறினார்.

போக்குவரத்துக்கு தடை

ராஜபாளையத்தில் புறவழிச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்த டி.பி.மில்ஸ் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகளால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே தென்காசி - மதுரை சாலை மட்டுமே தற்போது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே சாலையில் சென்று வருவதால் நாள் முழுவதும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

விழிப்புணர்வு கூட்டம்

இந்தநிலையில் நகருக்குள் இயங்கும் 500 ஆட்டோக்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. எனவே ஆட்டோக்களின் விதிமீறல்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது:- சீருடை இன்றி ஆட்டோ இயக்க கூடாது. மது அருந்தி விட்டு ஆட்டோ இயக்க கூடாது.

எல்.இ.டி. விளக்கு

அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது, டிரைவர் இருக்கையில் பயணிகளை அமர வைக்க கூடாது. முன்னால் மற்றும் பின்னால் பயணிப்பவர்களுக்கு இடையூறாக நீளமான கம்பி மற்றும் குழாய்களை எடுத்து செல்லக் கூடாது. ஆட்டோவின் மேல் பகுதியில் பாரம் ஏற்றக் கூடாது. கண்களை கூச செய்யும் எல்.இ.டி. விளக்குகள் நகருக்குள் பயன்படுத்த கூடாது. அனுமதிக்கப்படாத இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. போக்குவரத்து நெரிசலை தடுக்க விதிகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்