போதைக்கு அடிமையானால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்

போதைக்கு அடிமையானால் எதிர்காலம் பாதிக்கும் என்று மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.

Update: 2023-08-01 19:45 GMT
போதைக்கு அடிமையானால் எதிர்காலம் பாதிக்கும் என்று மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.


விருது வழங்கும் விழா


கோவை மாநகராட்சி, கோவை மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடந்தது.


இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கினார்கள். பின்னர் கோவை போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-


போதையால் வளர்ச்சி பாதிக்கும்


போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் பயன்பாட்டால் ஒருசில நாடுகள் வளர்ச்சி அடையாமல் போய் விட்டது.

அப்படி என்றால் தனி மனிதனின் வளர்ச்சியை போதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை மாணவர்களாகிய நீங்கள் உணர வேண்டும்.


போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மாணவர்களுக்கு தெரியாது. எனவே போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டும்.


அடிமையாகிவிடக்கூடாது


முக்கியமாக கல்லூரி மாணவர்கள் போதை பொருள் தடுப்பு தொடர்பாக மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். மாணவ பருவத்தில் கிடைக்கும் சுதந்திரத்தை உங்களின் குறிக்கோளை அடைய பயன்படுத்த வேண்டும்.

அதற்கு மாறாக போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்களின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடும்.


போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதற்கான பல காரணங்களை கூறுவார்கள். ஆனால் தவறான பழக்கத்தை நமது மனது நாடும் போது ஒரு நிமிடம் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படி செய்தால் தவறான பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம். எனவே மாணவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


படிப்பில் கவனம்


மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பேசும்போது, மாணவர் கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாக கூடாது.

தவறான பழக்கத்தை கற்றுக் கொடுக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். போதை பழக்கத்தில் இருக்கும் நண்பர்களை கண்டித்து மீட்க முயற்சிக்க வேண்டும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் போதைக்கு அடிமையாக மாட்டோம் என்று இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் தான் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார்.

மேலும் செய்திகள்