பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை

சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

Update: 2022-08-10 20:49 GMT

சுவாமிமலை;

சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டசிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

பஞ்சலோக சிலைகள்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில், ஸ்தபதி மாசிலாமணி என்பவர் வீட்டில் இருந்த 8 பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள், மாசிலாமணி வீட்டின் முன் திரண்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பழமையானவை இல்லை எனவும், போலீசார் எங்களின் கருத்துக்களை கேட்காமல் சிலைகளை பறிமுதல் செய்து சென்றுவிட்டதாக மாசிலாமணி மகன் கவுரிசங்கர் தெரிவித்தார்.

சென்னைக்கு கொண்டு சென்றனர்

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் போகசக்தி அம்மன் (3.75 அடிஉயரம்), நின்றநிலையில் புத்தர்( 2.5 அடி உயரம்) , அமர்ந்த நிலையில் புத்தர் (27 செ.மீஉயரம்), ஆண்டாள் (2.23 அடி உயரம்), சிவகாமி அம்மன் சிலை (9 அடிஉயரம்), விஷ்ணு (2 அடி உயரம்), நடராஜர்(3.37 அடி உயரம்), ரமணமஹரிஷி (1.14 அடி உயரம்) சிலைகளை பறிமுதல் செய்து சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

வௌிநாடுகளுக்கு கடத்த முயற்சி

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:- கடந்த 8-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாசிலாமணிக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் வீடுகளில் ஆய்வு செய்தனர். அங்கு சிலைகள் கிடைக்கவில்லை. விசாரணையில் மாசிலாமணி சிலைகளை சுவாமிமலையில் வைத்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி லாபம் அடைய திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை

இதைத்தொடர்ந்து கூடுல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திரா உள்ளிட்ட குழுவினர், சிலைகளை வைத்திருப்பதற்கான எந்தவிதமான ஆவணங்களும் இல்லாததால், மாசிலாமணியிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்தனர்.அவரிடம் சிலைகளின் உரிமம் அதன் தோற்றம் குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்கள் ஏதும் இல்லை. அதற்கான முறையான விளக்கமும் அவரால் கூற இயலவில்லை. எனவே மேற்படி சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது விசாரணைக்கு பிறகு தெரிய வரும்.இந்த சிலைகளை ஆய்வு செய்த போது சிலைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலைகள் என தெரியவந்ததுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்