வெளிநாட்டு தலைவர்களுக்கு தெய்வ விக்ரகங்களை பரிசாக வழங்கக்கூடாது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பேட்டி
வெளிநாட்டு தலைவர்களுக்கு தெய்வ விக்ரகங்களை பரிசாக வழங்கக்கூடாது என்று தர்மபுரியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
தர்மபுரி:
வெளிநாட்டு தலைவர்களுக்கு தெய்வ விக்ரகங்களை பரிசாக வழங்கக்கூடாது என்று தர்மபுரியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
முப்பெரும் விழா
தர்மபுரி மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் சிவபூஜை, அம்மையப்பர் திருக்கல்யாணம் மற்றும் உலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முப்பெரும் விழா தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில நிர்வாக தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். தொழிலதிபர் டி.என்.சி.மணிவண்ணன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக பரமாச்சாரிய சாமி கலந்து கொண்டு சிவனடியார்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். விழாவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி.யும், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மாநில தலைமை ஆலோசகருமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார். இதில் மாநில நிர்வாகிகள் பொன்ராஜ், ஜம்புலிங்கம், சொக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி மாவட்ட தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
தெய்வ விக்ரகங்கள்
தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருந்த உமா மகேஸ்வரி விக்ரகத்தை கடந்த 1960-ம் ஆண்டு இங்கிலாந்து ராணிக்கு பரிசாக வழங்கி உள்ளனர். இந்த சிலை அங்குள்ள அரண்மனையில் உள்ளது. அந்த சிலையை மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டு தலைவர்களுக்கு தெய்வ விக்ரகங்களை பரிசாக வழங்கக்கூடாது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
தமிழகம் முழுவதும் 26 ஆயிரம் கோவில்கள் உள்ளன. வருங்காலத்தில் இந்த கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத நிலை உருவாகும். அர்ச்சகர்களுக்கும், கோவில் பணியாளர்களுக்கும் அரசு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தெய்வ விக்ரகங்களை கோவிலிலேயே வைக்க நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழக கோவில்களில் இருந்து மாயமான தெய்வ விக்ரகங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.