கடல் வளம் குறைந்ததால் நலிவடைந்த ஐஸ் கட்டி உற்பத்தி தொழில்

தஞ்சை மாவட்டத்தில் கடல் வளம் குறைந்ததால் ஐஸ் கட்டி உற்பத்தி தொழில் நலிவடைந்து விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

Update: 2022-10-16 18:57 GMT

தஞ்சை மாவட்டத்தில் கடல் வளம் குறைந்ததால் ஐஸ் கட்டி உற்பத்தி தொழில் நலிவடைந்து விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

மீன்பிடி தொழில்

தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதியாக அதிராம்பட்டினம் உள்ளது. இந்த கடலோர பகுதி திருவாரூர் மாவட்ட எல்லை பகுதியான முத்துப்பேட்டை முதல் புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியான கட்டுமாவடி வரை 50 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது. இதில் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட 37 மீன்பிடி தளங்கள் உள்ளன.

மோட்டார் படகுகள் இல்லாத காலங்களில் அதாவது கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித்த கால கட்டத்தில் ஒவ்வொரு மீன்பிடி தளங்களிலும் 100-க்கும் குறையாத கட்டுமரங்கள் இருந்தன. இந்த பகுதியில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

மகிழ்ச்சியான காலகட்டம்

அந்த கால கட்டத்தில் மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு திரும்பும்போது ஒவ்வொருவரின் படகிலும் படகு நிறையும் அளவிற்கு மீன்கள் பிடிபட்டன. இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரைதிரும்பும் நிலை இருந்து வந்தது.

கட்டுமரங்களை கொண்டு கடலில் அதிக அளவு தூரம் செல்ல முடியாது என்பதால் கரையோரம் மட்டுமே மீன்பிடித்து வந்தனர். அப்போது கரை பகுதியிலேயே படகு கொள்ளாத அளவிற்கு மீன்கள் அகப்பட்டு வந்ததாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் நினைவை பகிர்ந்து கொள்கின்றனர்.

கடல் வளம் குறைந்தது

ஆனால் தற்போது மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் வந்து விட்ட நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றாலும் மீனவர்கள் வெறும் கையுடன் திரும்பிவருகிறார்கள். அந்த அளவுக்கு கடல் வளம் குறைந்துவிட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்ட கடலின் வளம் பாதிக்கப்பட்டு மீன்வரத்து குறைந்துள்ளதால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலான ஐஸ் கடடி உற்பத்தி தொழில் கடுமையாக நலிவடைந்து உள்ளது. இது ஐஸ் உற்பத்தியாளர்களை பெரும் கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து ஐஸ் உற்பத்தியாளர் செய்யது இப்ராகீம் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தஞ்சை கடல் பகுதியில் ஊருக்கு ஒரு ஐஸ் கம்பெனி இருந்தது. ஒவ்வொரு ஐஸ் கம்பெனியிலும் கூட்டம் நிறைந்து காணப்படும்.

ஏற்றுமதி பாதிப்பு

சில சமயம் ஐஸ் கட்டிகளுக்கு கடுமையாக கிராக்கி ஏற்பட்டு சப்ளை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டது உண்டு. அந்த அளவுக்கு மீன்வரத்து இருந்ததால் மீன் ஏற்றுமதியும், ஐஸ் கட்டி தயாரிப்பு தொழிலும் படு ஜோராக இருந்துவந்தது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. மீன்வரத்து அறவே இல்லாததால் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டு ஐஸ் கட்டிகளின் தேவை குறைந்து விட்டது. முன்பு ஒரு நாளைக்கு 100 ஐஸ் பார்கள் விற்கப்பட்டு வந்த நிலையில் (ஒரு ஐஸ் பார் என்பது 50 கிலோ எடை கொண்டது) தற்போது வெறும் 30 ஐஸ் பார்களே விற்பனையாகிறது. ஐஸ் கம்பெனிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.

தேவை குறைவு

ஒரு ஐஸ் பாரின் விலையும் உயரவில்லை. தற்போது ஐஸ் கட்டிக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளபோதிலும் தேவை குறைந்து விட்டதால் எங்களால் விலையை ஏற்ற முடியவில்லை. இதனால் கடை வாடகை, மின்கட்டணம், தொழிலாளர்களுக்கு சம்பளம் என செலவானது போக நஷ்டம் தான் மிஞ்சுகிறது.

கடல் சீற்றம், மழை காலங்கள் மற்றும் மீன்பிடி தடை காலங்களில் ஐஸ் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு விடுகிறது. அந்த நேரங்களில் கடன் வாங்கித்தான் வாடகை, மின்கட்டணம் செலுத்தி வருகிறோம்' எனறார்.

வருமானம் இல்லாமல்...

இது பற்றி மீனவர்கள் கூறுகையில், 'தஞ்சை கடல் பகுதியில் கஜா புயலுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சம்பா நண்டு, நெடுங்கான் நண்டு, இறால், காளை மீன் என பல வகையான மீன்கள் வியாபாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கடலில் மீன் வரத்து மிகவும் குறைவாக உள்ளதால் டீசல் செலவுக்கு வருமானம் இல்லாமல் வீடு திரும்புகிறோம். மீன்பிடிக்க வலைவிரிக்கும்போது மீன்களுக்கு பதிலாக கடல் பாசிகளே அதிக அளவில் வலையில் சிக்குகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்