ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளில் வரும் 1,105 சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினார்கள்.
சென்னை,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் 24 வகையான பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதியான நபர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) தேர்வை நடத்தி தேர்வு செய்து வருகிறது. முதல் நிலை, முதன்மை, நேர்முக தேர்வு என்ற அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வர்களை தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. மொத்தம் 1,105 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 7 லட்சம் பட்டதாரிகளும், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எழுத அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
79 நகரங்களில் தேர்வு நடந்தது
சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நாடு முழுவதும் 79 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் என 5 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் திறனறிவு தேர்வும் நடந்தது. தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே தேர்வர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.
தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்று விடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் செல்போன் உள்பட மென் சாதன பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வினாத்தாள் எப்படி இருந்தது?
தேர்வை பொறுத்தவரையில் காலை மற்றும் மாலையில் கேட்கப்பட்ட 2 தேர்வுகளிலும் வினாக்களின் தரம் சிறப்பாக இருந்தது என தேர்வர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஓரிரு வினாக்கள் சற்று கடினமாக இருந்தது என்றும், போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக பிற்பகலில் கேட்கப்பட்ட திறனறிவு வினாத்தாளில் 35 கணக்கு தொடர்பான வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டு இருந்ததாகவும், அதற்கு பதில் அளிக்க சிரமப்பட்டதோடு, நேரமும் கிடைக்காமல் போனதாகவும் தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதல்நிலை தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வினாத்தாள் கடினமாகவே இருந்ததாக கூறப்படுகிறது
தேர்வு முடிவு
முதல்நிலை தேர்வு முடிந்துள்ள நிலையில், இதற்கான தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 19 அல்லது 20-ந் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் முதல் நிலை தேர்வு முடிந்த 17 நாட்களில் தேர்வு முடிவு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள், அடுத்ததாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதன்மை தேர்வை பொறுத்தவரையில் 5 நாட்கள் நடக்கும். அதன்படி முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் முதன்மை தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
முதன்மை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும். அதில் தங்களுடைய திறமையை நிலைநாட்டுபவர்கள் சிவில் சர்வீசஸ் பதவிகளில் அலங்கரிப்பார்கள்.