விழுப்புரம் கோர்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாட்சியம்

லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைதான வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

Update: 2022-06-09 17:28 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயியான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு அப்போதைய செஞ்சி தாசில்தாராக பணியாற்றிய ஆதிபகவனை அணுகினார். அதற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுக்க வேண்டுமெனில் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று தாசில்தார் ஆதிபகவன் கறாராக கூறினார்.

இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை வடிவேல் எடுத்துக்கொண்டு தாசில்தார் ஆதிபகவனிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு துறை ரீதியாக தாசில்தார் ஆதிபகவனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து அப்போதைய கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சாட்சியம்

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு இவ்வழக்கில் அரசு தரப்பில் 15 சாட்சிகளையும் சேர்த்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கலெக்டரான அண்ணாதுரை, விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சாட்சியம் அளித்த விழுப்புரம் மாவட்ட முன்னாள் கலெக்டர் அண்ணாதுரை தற்போது சென்னையில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்