"தமிழ்நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன்"-ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
“தமிழ்நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன்” என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம்:
"தமிழ்நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன்" என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பொதுக்கூட்டம்
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் வரவேற்று பேசினார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சர் நேருவுக்கு பாராட்டு
தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் எத்தனையோ ஊர்களில் நடந்தாலும் மன்னராட்சி காலத்தில் கோட்டை, கோவில் அமைந்த இந்த ஆத்தூரில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் நேரு எங்கு இருக்கிறாரோ அங்கு மாநாடு தான் நடக்கும். நேரு என்றாலே மாநாடு, மாநாடு என்றாலே நேரு என்று பலமுறை நான் கூறியுள்ளேன். நேருக்கு நிகர் நேரு என்று பாராட்டி உள்ளேன். நேருவை பாராட்டுவது என்னை நானே பாராட்டுவதற்கு சமம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் தி.மு.க.விற்கு வெற்றி இல்லை. அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் தலைமை கழகம் சார்பில் நேருவை அனுப்பி வைத்தோம். நேரு வந்தார், வென்றார் என்று சொல்லும் அளவில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றோம். அடுத்து வரும் எந்த தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இந்த கூட்டத்தை பார்த்ததும் வந்துள்ளது.
தலை நிமிர வைத்து உள்ளேன்
சேலம் மாவட்டத்தில் உள்ள 3 மாவட்ட செயலாளர்கள் வழிநடத்துவது மட்டுமல்லாமல், சேலம் மாவட்டத்தின் முப்படை தளபதிகளாக அமைந்து உள்ளனர். அவர்கள் செய்யும் பணியை கண்காணித்துக் கொண்டு உள்ளேன். அந்த பணிகளை பார்க்கும்போது சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மீண்டும் வெற்றி ெபறும் என்பதில் சந்தேகம் இல்லை. சேலம் வீரபாண்டியாரின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும்.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது ஒரு தயக்கம் இருந்தது. 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் பாதாளத்திற்கு போய் உள்ளது. ஒரு ஆண்டில் அவற்றை சீர் செய்ய முடியுமா? என்று யோசித்தேன். ரூ.6 லட்சம் கோடி கடன் என்ற நிலையில் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருந்தது. நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியுமா? என்று யோசித்தேன்.
தற்போது ஓராண்டு ஆட்சியில் தமிழகத்தை தலை நிமிர வைத்து உள்ளேன் என்பதை நான் தலை நிமிர்த்து சொல்வேன். தரையில் ஊர்ந்த தமிழகத்தை நெஞ்சை நிமிர்த்தி வைத்து உள்ளேன். தமிழகத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக, முதன்மை மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தற்போது வந்துள்ளது.
மேட்டூர் அணை
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்கு திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நானே மேட்டூர் அணையை திறந்து வைத்தேன். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டு ஒரு முறை மட்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு அவர்கள் விருப்பப்படி மேட்டூர் அணை திறந்து வைத்தார்கள். விவசாயிகள் பற்றி அ.தி.மு.க.வினருக்கு கவலை இல்லை.
தற்போது தி.மு.க. ஆட்சியில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் மேட்டூர் அணையை திறக்க முடிவு செய்யப்பட்டது. மக்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததால் மழை கொட்டுகிறது. இயற்கை நம் பக்கம் உள்ளது. நாடு விடுதலை அடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பது இதுதான் முதல்முறை என்பது பெருமையாக இருக்கிறது.
கடைமடை வரை தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் என்று கடந்த ஆண்டு தூர்வாரும் பணி ரூ.80 கோடியில் நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லும். உழவர்களுக்கு ரூ.60 கோடி குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் நெல் சாகுபடி பரப்பளவு 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கராக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோடியே 10 லட்சம் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் உணவு உற்பத்தி இப்போதுதான் அதிகம்.
இலவச மின் இணைப்பு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பணவீக்கம் குறைந்து உள்ளது. மகளிருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் வழங்கியதன் மூலம் மாத சம்பளம் மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் என ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.600 முதல் ரூ.2 ஆயிரத்து 400 வரை மிச்சப்படுத்தியுள்ளனர். அதே போன்று மக்களை தேடி மருத்துவத் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பயன் அடைந்து உள்ளனர்்.
ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்ததால் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் நன்மை அடைந்து உள்ளனர். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைத்து உள்ளோம். கொரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியது மக்களுக்கு ஆறுதல் அளித்து உள்ளது. ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. 5 பவுனுக்கு கீழ் அடகு வைத்த 13 லட்சம் பேரின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாராட்டு
தேர்தலுக்கு முன்பு மக்களை சந்தித்த போது என்னிடம் மனு கொடுத்தார்கள் அந்த மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டப்பட்டது. ஆட்சி அமைந்ததும் பூட்டப்பட்ட பெட்டி திறக்கப்பட்டு 2 லட்சத்து 50 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 100 நாட்களில் சொன்னதை செய்தேன். தற்போது உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் கொளத்தூர், காட்பாடி தொகுதி மட்டுமல்ல எடப்பாடி என அனைத்து தொகுதிகளிலும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஆத்தூர் தொகுதி உள்பட 234 தொகுதிகளையும், எனது சொந்த தொகுதி என்று நினைத்து ஆட்சி நடத்துகிறேன். தி.மு.க. ஆட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் எதிலும் குறை சொல்ல முடியவில்லை. தற்போது ஆன்மிகத்தை வைத்து குறை சொல்ல தொடங்கி உள்ளார்கள். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. உண்மையாக ஆன்மிகத்திற்கு ஆதரவு கொடுப்பது யார்?, மதத்தை தூண்டி அரசியல் நடத்துகிறார்கள். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாருக்கும் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை.
எடப்பாடி தொகுதியில் எதுவும் செய்யவில்லை
தேர்தலுக்கு முன்பு எடப்பாடி தொகுதியில் மக்களை சந்திக்க சென்ற போது அங்கு 10 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலை வழங்கவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் தொகுதி ஆச்சே, பெரிய அளவில் புகார்கள் ஏதும் இருக்காது என்று நினைத்து சென்றேன். ஆனால் 2 மணி நேரம் எடப்பாடி தொகுதி மக்கள் என்னிடம் புகார் கூறினார்கள்.
போட்ட ரோட்டையே போடுகிறார்கள். மேட்டூர் அணை உபரி நீர் திட்டம், கொங்கணாபுரம் கூட்டுறவு சங்க பிரச்சினை, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினை என எந்த கோரிக்கையும் ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கோடநாடு கொலை, கொள்ளை போன்ற வேதனையான சாதனைதான் நடந்தது. தற்போது ஒரு ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு சாதனைகளை நிறைவேற்றி நிமிர்ந்து நிற்கிறோம்.
சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு, ஜவுளி தொழில், தொழில்நுட்ப பூங்கா ஆகிய மூன்று தொழில்கள் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
யாராலும் வீழ்த்த முடியாது
மத்திய அரசு 2 நாளைக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து உள்ளது. பல மடங்கு விலையை ஏற்றி விட்டு சிறிய அளவு குறைத்து உள்ளார்கள். எந்த அளவு விலையை ஏற்றினார்கள் அந்த அளவு விலையை குறைக்க வேண்டும் மாநில அரசின் நிதியை மத்திய அரசு சுரண்டி விட்டது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. மக்களுக்கு சேவை செய்வதை தடுப்பதற்காக மத்திய அரசு ரூ.21 ஆயிரத்து 670 கோடி நிதியை நிறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெருத்தெருவாக கூட்டங்கள் நடத்தி மக்கள் மனதில் கொண்டு சேர்க்க வேண்டும். தி.மு.க. தமிழையும், தமிழ் மக்களையும் பாதுகாக்கும். எத்தனை விஷம பிரசாரம் செய்தாலும் தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. அதற்கு காரணம் நீங்கள் (தொண்டர்கள், பொதுமக்கள்) தான். இது எனது அரசு அல்ல, நமது அரசு. அனைவரும் சேர்ந்து தான் ஆட்சி நடத்தி வருகிறோம். திராவிட ஆட்சி 8 திசை எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சி
தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். தனிநபர் வருமானம் அதிகப்படுத்த வேண்டும். சுயமரியாதை உள்ளிட்டவை தான் திராவிட மாடல் ஆட்சி, ஏழை, எளிய, நரிக்குறவர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகளை கேட்கும், ஆட்சி தி.மு.க. இனி தமிழ்நாட்டில் தி.மு.க. ஆளும் என்றால் இந்தியாவில் தமிழ்நாடு, இனி தலைசிறந்த மாநிலமாக விளங்கும்.
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று அண்ணாவின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். என் சக்திக்கு மீறி மக்களுக்காக உழைப்பேன். பெரியார், அண்ணா, கருணாநிதி, கருப்பு, சிவப்பு கொடி, உதயசூரியன் இந்த 6-ம் தமிழ் மக்களின் மனதில் சிந்தனை ஆறாக ஓடும். இருளை நீக்கி ஒளியேற்றுவது கருப்பு, சிவப்பின் அடையாளம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செங்கோல்
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க.சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் எம்.பி.க்கள் எஸ்.ஆர். பார்த்திபன், பொன்.கவுதமசிகாமணி, சின்ராஜ், மேயர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் டாக்டர் வீரபாண்டி மலர்விழி ராஜா உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து ெகாண்டனர்.