என் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்: பெருந்துறையில் மக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் பேச்சு

தமிழ்நாட்டை வளமும், நலமும் கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்றும், என் உயிர் இருக்கிற வரையில் உழைத்துக்கொண்டே இருப்பேன் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-08-27 00:07 GMT

ஈரோடு,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.262 கோடி செலவில் 135 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.184 கோடி மதிப்பீட்டிலான 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 63,858 பயனாளிகளுக்கு ரூ.167.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பேசியதாவது:-

கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்திற்கு செய்து தரப்பட்டுள்ளது. நான் பொள்ளாச்சி போகும்போது, அங்கிருந்த விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதனையொட்டி, சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். மாநில நெடுஞ்சாலையான ஈரோடு - திங்களூர் சாலையை கடந்து, ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் - சத்தி - கோபி - ஈரோடு சாலை வரை நீட்டித்து அமைத்தலுக்கான விரிவான திட்ட அறிக்கை, ரூபாய் 60 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.

முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்

தற்போது ஈரோடு மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பாக 16 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஈரோட்டில் 2 கோடி ரூபாய் செலவில், குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். நல்லாம்பட்டியிலும் 2 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். தாளவாடியிலும் 2 கோடியே 82 லட்ச ரூபாய் செலவில், குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக, 10 கோடி ரூபாய் செலவில், மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். அதேபோன்று, தாளவாடி மக்களின் கோரிக்கையாக, அரசு ஆரம்பர சுகாதார நிலையத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். மேலும், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே கருவியும் நிறுவப்படும். ஈரோடு மாவட்டத்தை, எல்லாவற்றிலும் முதன்மை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம்.

கருணாநிதி பாராட்டு

இங்கு வருவதற்கு முன்னால், அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை நான் பார்வையிட்டேன். அந்த அரசுப் பணிகளை உடனடியாக துரிதமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். நிச்சயம், இன்னும் சில மாதங்களில் அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு, நானே நேரடியாக வந்து அதை தொடங்கி வைப்பேன்.

இத்தகைய அரசு விழாக்கள் பொழுதுபோக்குக்காக நடைபெறுகிற விழாக்கள் அல்ல, ஏதோ எங்களைப் புகழக்கூடிய விழாக்கள் அல்ல. மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் - என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய விழா தான். 'ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்று உழைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய கருணாநிதி பாராட்டிச் சொன்னதைவிட எனக்கு வேறு ஏதேனும் பாராட்டு வேறு இருக்க முடியுமா?.

இன்னும் உழைப்பேன், என் உயிர் இருக்கிற வரையில் உழைத்துக் கொண்டே இருப்பேன். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அனைத்து விதமான வளார்ச்சியை உள்ளடக்கிய திராவிட மாடல் இலக்கணப்படி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

மண்ணை காக்கும் அரசு

இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமல்ல, மண்ணை காக்கக்கூடிய அரசாகவும் இது செயல்படுகிறது.

அனைவரும் பாராட்டக்கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது. அது மட்டுமல்ல, அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

உங்களுக்காக உழைப்பேன்

ஊருக்கு உழைப்பதை, உங்களுக்கு உழைப்பதை என் வாழ்நாள் கடமையாக கருதி உழைத்து வருகிறேன். அழுத்தமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். நான் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச்சமுதாயத்தை வளமும், நலமும் பெற்ற சமுதாயமாக - தமிழ்நாட்டை வளமும், நலமும் கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக மாற்றிக்காட்டினேன் என்று பெயரெடுப்பதற்காகவே நான் உழைத்து வருகிறேன்.

கோட்டையில் இருந்தாலும், மக்களின் மனங்களில் வாழ்வதையே பெரும் பேறாகக் கருதக்கூடியவன் நான். எனவே, உங்கள் அனைவரின் ஆதரவோடு, என் இலக்கை நோக்கி நான் நடைபோடுகிறேன். உங்கள் துணையோடு நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்