கூட்டணி முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2024-01-09 08:03 GMT

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய கள நடவடிக்கைகள், தொண்டர்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதன்விவரம் பின்வருமாறு:-

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை நான் பார்த்துக்கொள்கிறேன். வேட்பாளர்களை தேர்வுசெய்து வையுங்கள்; கூட்டணி முடிவானதும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அளிக்க வேண்டும். தேர்தல் பணிகளை அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை உடனடியாக களைய வேண்டும்.

கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும். மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக கவனம் செலுத்தி கட்சியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இன்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்