எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக பெற்றால் அ.தி.மு.க.வை விட்டு விலகுகிறேன்

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக பெற்றால் அ.தி.மு.க.வை விட்டு விலகுகிறேன் என எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.வைத்திலிங்கம் சவால் விடுத்தார்.

Update: 2023-06-12 20:19 GMT

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக பெற்றால் அ.தி.மு.க.வை விட்டு விலகுகிறேன் என எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.வைத்திலிங்கம் சவால் விடுத்தார்.

வைத்திலிங்கம் பேச்சு

தஞ்சை தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மாலை நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

இன்றைக்கு தி.மு.க. ஆட்சி யாரால் வந்தது. சுயநலக்காரரான எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்வதை அவர் கேட்டு இருந்தால் அ.தி.மு.க. தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும். தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 524 தேர்தல் அறிக்கை அறிவிப்புகளை வெளியிட்ட தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை.

இரட்டை குழல் துப்பாக்கியாக...

எதிரிகள் எங்களை நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் துரோகிகள், அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதை தடுத்து விட்டார்கள். அதை நிறைவேற்றத்தான் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். தமிழகத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக தான் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் அடித்தளமிட்டுள்ளனர்.

நிச்சயம் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.முக., அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. ஒன்றாக இணைய யார் தடையாக இருந்தாலும் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள். தொண்டர்களால் அவமானப்படுத்தப்படுவார்கள். அதிகாரம், பணம் இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்கள்.

இரட்டை இலை சின்னம்

தொண்டர்கள் தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். அதனால் தான் நாங்களும் போராடிக்கொண்டு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் ஒரு தொகுதியில் கூட ஆயிரம் வாக்குகள் அவரால் வாங்க முடியாது.

எங்களை கத்திரிக்கோல் சின்னத்தில் நிற்க வேண்டியது தானே என்று சிலர் சொன்னார்கள். நாங்கள் கத்திரிக்கோல் சின்னத்தில் தேர்தலில் நிற்க தயார். எடப்பாடி பழனிசாமி பிளேடு சின்னத்தில் நிற்க தயாரா? அப்படி நின்று எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கி விட்டால் அ.தி.மு.க.வை விட்டு விலகி விடுகிறேன்.

அ.தி.மு.க. ஆட்சி

காலத்தின் சூழச்சியாலும், நயவஞ்சகத்தாலும் அதிகாரத்தோடு பேசிய எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாடு தொகுதிக்கு வைத்திலிங்கம் ஒன்றும் செய்யவில்லை என கூறியுள்ளார். நான் அ.தி.மு.க.வில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு சசிகலா, தினகரன், திவாகரன் போன்றவர்கள் உதவிகரமாக இருந்தார்கள்.

ஜெயலலிதாவிடம் கூறி, தஞ்சை மாவட்டத்திற்கு கால்நடை, வேளாண், பொறியியல் கல்லுாரி இப்படி பல கல்லுாரியை கொண்டு வந்துள்ளேன். தஞ்சையை மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்திற்கு செய்ததை விட தஞ்சை மாவட்டத்திற்கு அதிகமாக நான் செய்து இருக்கிறேன். காலத்தின் கட்டாயத்தால் அ.தி.மு.க. நிச்சயம் இணையும். 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். 2026-ல் அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்