ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் வெளியிடுவேன் -அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தி.மு.க.வினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் வெளியிடுவேன் என்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

Update: 2023-04-14 23:27 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்பு ஏப்ரல் 14-ந்தேதியன்று தி.மு.க. தலைவர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, சென்னை கமலாலயத்தில் நேற்று, தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்களின் சொத்து பட்டியல் என்று கூறி வீடியோ வெளியிட்டார்.

பின்னர் அண்ணாமலை அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு:-

அரசியலில் சாமானியன் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. சாமானியனுக்கு இருக்கும் பிரச்சினை எனக்கும் இருக்கிறது. அரசியல்வாதியாக மாதத்துக்கு எனக்கு பல லட்சம் செலவாகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை மாநில தலைவராக எனக்கு சாதாரணமாக செலவாகிறது. என்னுடைய சம்பாத்தியத்தில் இதனை சரிகட்டமுடியாது. என்னை சுற்றிலும் இருக்கும் நண்பர்கள் மற்றும் கட்சியினர் உதவியால் சமாளித்து வருகிறேன். காருக்கான டீசல் கட்சி கொடுக்கிறது. பாதுகாப்பு அதிகரித்தப்பிறகு, பாதுகாப்பு படையினர் உடன் இருப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பெரிய வீடு வாடகைக்கு எடுத்துள்ளேன். அந்த வாடகையை ஒரு நண்பர் கொடுக்கிறார். முதல் தலைமுறை அரசியல்வாதிக்கு இருக்கும் பிரச்சினையை பல நல்ல உள்ளங்களால்தான் எனது அரசியல் வாழ்க்கையை நகர்த்த முடிகிறது.

நான் பயன்படுத்தும் கார் ஒரு நண்பர் பெயரில் இருக்கிறது. எனது 3 தனி உதவியாளர்களுக்கும் என் உடன் படித்த கம்பெனி நடத்தும் நண்பர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். என்னை சுற்றிலும் இருக்கும் நல்ல நண்பர்களின் உதவியோடு எனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. ரபேல் வாட்ச் உலகத்தில் 500 தான் இருக்கிறது. நான் அணிந்திருப்பது 147-வது வாட்ச். ரபேல் விமானத்தை போன்று, இந்த வாட்ச் தனித்துவமானது. இந்தியாவில் இந்த ரக வாட்ச் 2 தான் இருக்கிறது. ஒரு வாட்ச் மும்பையில் இருக்கும் தனியார் கம்பெனி அதிகாரி ஒருவர் கட்டியிருக்கிறார். 2-வது வாட்ச், கோவை ரேஸ் கோர்சில் இருக்கும் சிம்சன் என்ற கம்பெனியில் விற்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ச்சை மே மாதம் 27-ந்தேதி வாங்கினேன். இந்த வாட்ச் இப்போது சந்தையில் இல்லாததால் யாராலும் வாங்கமுடியாது.

ரபேல் வாட்ச்

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவையில் இருக்கும் நண்பர் சேரலதான் ராமகிருஷ்ணன் என்பவர்தான் ஓரிஜினல் ஓனர். ரபேல் போர் விமானம் வந்தபோது, இந்த வாட்சை கட்டவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ரபேல் வாட்ச் என்பதை தெரிந்து கொண்டு, சேரலதான் ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டு பேசினேன். சிம்சன் கம்பெனி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அப்போது இந்த வாட்சை சேரலாதன் ராமகிருஷ்ணன் கொடுப்பதற்கு முன்வந்தார். ரூ.3 லட்சத்துக்கு இந்த வாட்ச்சை வாங்கினேன். அதற்கான ரசீது என்னிடம் இருக்கிறது. நான் சுத்தமானவன். நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்வதற்காக வந்திருக்கிறேன் என்பதற்காக வாட்ச் பில்லை காண்பித்திருக்கிறேன்.

முதல் பட்டியலில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி நேரடி சொத்துகள் தொடர்பான பட்டியல் வெளியிட்டிருக்கிறோம். தமிழனை மையமாக வைத்து, தமிழர்களை எப்படி உயர்த்த வேண்டும் என்று அரசியல் நடக்கவில்லை. இந்த சொத்து பட்டியலை பார்க்கும்போதே அனைவருக்கும் தெரியும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஒழித்துவிட்டு, லஞ்சம், ஊழலை மாற்றவில்லையென்றால் தமிழ் சமூகத்துக்கு மிகப்பெரிய கேடு காத்திருக்கிறது. நான் இன்று (நேற்று) ஒரே நாளில் பெரிய, பெரிய எதிரிகளை சம்பாதித்துவிட்டேன். தமிழக அரசியலை பொறுத்தமட்டில் பேசாமல் இருப்பார்கள். 4½ வருடம் எதிர்க்கட்சியாக முடிந்துவிடும். மீதம் உள்ள 6 மாதம் 3 அறிக்கை விடுவார்கள். 2 போராட்டம் நடத்துவார்கள். தேர்தலை சந்திப்பார்கள். 4 சதவீதம் ஓட்டு வரும். பின்னர் ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் பா.ஜ.க. செய்யும் விதம் புதிது.

பாதயாத்திரை

எங்களை தொடவேண்டும் என்றால் வாழ்க்கை புத்தகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும். அதனால்தான் என்னுடைய மொத்த வருமானத்தையும் வெளியிட்டிருக்கிறேன். அடுத்த அமைச்சர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் ஊழலை எதிர்த்து தமிழகத்தில் பாத யாத்திரை ஜூன் மாதத்தின் முதல் மற்றும் 2-வது வாரத்தில் தொடங்குகிறோம். மண் லாரி, தண்ணீர் லாரி எங்கிருந்து வரும் என்பதை அறிந்துதான் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

என்ன செய்தாலும், என்னுடைய பேச்சும், வீரியமும் குறையாது. ஒவ்வொரு பகுதியாக பட்டியல் கட்சி பாரபட்சமின்றி வந்து கொண்டே இருக்கும். மக்கள் தான் முடிவு எடுக்கவேண்டும். யாருக்கு வாக்களித்தால் தமிழகத்துக்கு நல்லது என்பதை பற்றி மக்கள் முடிவு எடுங்கள். 2024 தேர்தலிலும் வெற்றி பெற்று நாங்கள் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம். அப்படி இருக்கும்போது தி.மு.க. எம்.பி.க்களுக்கு வாக்களித்து பலன் இல்லை.

டெல்லிக்கு சென்று மாற்றிவிட்டு வாருங்கள்

முறைகேடு பட்டியல் ஒன்றுடன் முடிவடையாது. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சியெல்லாம் அமைந்திருக்கிறதோ, ஒரு கட்சிக்கு மட்டுமல்ல அத்தனை கட்சிகளின் ஊழல்களும் 2024 தேர்தலுக்கு முன்பு கொண்டுவரப்போகிறேன். ஊழலை எதிர்க்கிறோம் என்றால் மொத்தமாகத்தான் எதிர்க்கவேண்டும். பாதியை மட்டும் எதிர்க்கக்கூடாது. மக்களுக்கு நம்பிக்கை இருக்காது. ஊழல் செய்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எதிர்க்கக்கூடாது என்றால் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். சக்தி, தெம்பு, திராணி இருந்தால் மாற்றிவிட்டு வாருங்கள். நான் இருக்கும் வரை ஊழலை எதிர்ப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின்போது, பா.ஜ.க. அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார், ம.பொ.சி. மகள் மாதவி பாஸ்கரன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்