அமைச்சர்கள் சொத்துப்பட்டியலை வெளியிடுவேன் -அண்ணாமலை பரபரப்பு பேச்சு
அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துப்பட்டியலை வெளியிடுவேன் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவில்வழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சியில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
விழாவில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக இருப்பது ஊழல் என்று தான். ஊழலின் ஆழம் என்பது ஒரு தலைமுறையை அழித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தி.மு.க.வினர் நான் கட்டியிருக்கும் கைக்கெடிகாரத்துக்கு பில் வேண்டும் என்றனர். நானும் கைக்கெடிக்காரத்துக்கான பில் கொடுப்பதற்கான தேதி, நேரம் குறிப்பிட்டு விட்டேன். கைக்கெடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன் என்பது குறித்து முழு ஆதாரத்தை கொடுக்க உள்ளேன்.
சொத்துக்கணக்குகளை வெளியிடுவேன்
கெடிக்கார பில் மட்டுமல்ல, 13 ஆண்டுகளாக நான் போலீஸ் அதிகாரியாக இருந்து சம்பாதித்த சொத்து அனைத்தையும் பொதுமக்களிடம் தெரிவிக்கிறேன். அனைத்து வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிப்பேன். நான் மேற்கொள்ள இருக்கிற பாத யாத்திரைக்கு முன்பு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்காக இணையதளம் தொடங்கி வருடம் வாரியாக நான் செலவு செய்த விவரங்கள் அதில் இடம்பெற இருக்கிறது. நான் தி.மு.க. வினரை பார்த்து இதேபோல் நீங்கள் கொடுங்கள் என்று கேட்பதை விட, மக்களாகிய நீங்கள் தி.மு.க.வினரை பார்த்து இதுபோல் சொத்துவிவரங்களை கொடுங்கள் என்று கேட்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சொத்துப்பட்டியல்வெளியிடப்படும்
தி.மு.க. அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்கள் சொத்துப்பட்டியலும் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்படும். முதல்-அமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும். நமக்கு தெரிந்தவரை ரூ.2 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. முதல்-அமைச்சர் முதல் தி.மு.க. எம்.எல்.ஏ. வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.
ரூ.2 லட்சம் கோடிக்கான சொத்துப்பட்டியல், ஊழல் பட்டியலால் ஏப்ரல் மாதம் முதல் களைகட்ட தொடங்கும். மக்கள் நேர்மையின்பக்கம் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைநிருபர்களிடம் கூறியதாவது:-
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் எனது கைக்கெடிகாரத்தின் பில் மட்டுமல்ல அனைத்தையும் நான் கொடுக்கிறேன். 13 அமைச்சர்களின் சொத்து பட்டியல் இதுவரை தயார் செய்துள்ளோம். ரூ.2 லட்சம் கோடியை தொட்டுள்ளது.
ஒவ்வொரு தி.மு.க. அமைச்சர், எம்.எல்.ஏ.வுக்கு சொத்துப்பட்டியல் தயாரிக்க உள்ளோம். இன்னும் 1 மாத காலத்துக்குள் மக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதள முகவரி வழங்க இருக்கிறோம். தி.மு.க.வினரின் பினாமி சொத்துகள் இருப்பது தெரிந்தால் அந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். விரைவில் அதற்காக தனியாக செயலியை வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.