தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

Update: 2022-09-03 16:39 GMT

தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஒற்றுமை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாக நம்புகிறேன். ஆனால் கொங்கு மண்டலம் என்றாலே, ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் சொந்தம்போல் கூறுகிறார்கள்.

போட்டியிட மாட்டேன்

தேர்தலில் 5 முறை நான் போட்டியிட்டு 2 முறைதான் வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊரில் உள்ள அனைவரும் வெற்றி பெற்றபோது, திருஷ்டி பரிகாரமாக நான் மட்டும் தோற்றேன். தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன். அதற்கு தோல்வி ஒரு காரணமில்லை. ஈரோடு, கோபி, கிருஷ்ணகிரியில் தோல்வி அடைந்து இருக்கிறேன். எனவே தோல்வி என்பது எனக்கு பழக்கப்பட்டது. எனக்கென்று தனிப்பட்ட மரியாதை இல்லை. கட்சியை சார்ந்துதான் வாக்குகள் கிடைக்கும். நான் தனியாக நின்றால் டெபாசிட்கூட பெறமுடியாது என்று தெரியும்.

அமித்ஷாவும், நரேந்திரமோடியும் இந்திய மக்களை நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள். தமிழக நிதி அமைச்சரை காலடிக்கு சமம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறிஇருக்கிறார். மேலும், ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காண்பிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

வால் நறுக்கப்படும்

காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த தமிழகத்தில் அண்ணாமலை வால் ஆட்டினால் நறுக்கப்படும். தமிழகத்தில் 2 பா.ஜ.க. தலைவர்கள் இருக்கிறார்கள். அண்ணாமலையும், ஆர்.எஸ்.எஸ்.ரவியும். அவரை ஆர்.வி.ரவி என்றும் கூறலாம்.

ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. கூட்டணி காரணமாக நமது கட்சியை சோ்ந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலின்போது தி.மு.க.வுடன் இணைந்து செயல்படக்கூடாது என்று நமது கட்சியை சேர்ந்தவர்கள் குறுந்தகவல் அனுப்பினார்கள். இது ராகுல்காந்தியை பிரதமராக்க விடக்கூடாது என்பதைபோல் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்பாடு கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடாது.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்