பெண்கள் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவேன்: அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக ஈரோடு மாறும்; மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் பேட்டி
பெண்கள் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவேன் என்றும், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக ஈரோடு மாறும் எனவும் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கூறினார்.
பெண்கள் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவேன் என்றும், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக ஈரோடு மாறும் எனவும் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கூறினார்.
ஜவுளியின் தலைநகரம். மஞ்சள் மாநகர் என்ற பெருமைக்கு சொந்தமான ஈரோடு மாநகராட்சியின் மேயராக பதவி வகித்து வருபவர் நாகரத்தினம் சுப்பிரமணியம். ஈரோடு மாநகராட்சியின் 50-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று, கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராக நிறுத்தப்பட்டு மேயராக தேர்வு பெற்றார்.
ஆச்சரியம்
இவர் பதவிக்கு வந்தபோது ஈரோட்டு மக்களுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. அரசியலுக்கு அறிமுகம் இல்லாத நபர். இவரால் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் திறமை இருக்குமா?. இவரது கணவர் சுப்பிரமணியம் தி.மு.க. மாநகர செயலாளர் என்ற காரணத்தால் இந்த பதவி வழங்கப்பட்டதா? என்ற விமர்சனங்களும் இருந்தன.
நாகரத்தினம் சுப்பிரமணியம் மேயராக பதவி ஏற்று 10 மாதங்கள் ஆகின்றன. இந்த காலகட்டத்தில் மேயர் ஆற்றியிருக்கும் பணிகள் என்ன? என்ற கேள்வி எழுவது இயற்கைதானே...
இந்த கேள்வியோடு நாம் மேயர் நாகரத்தினத்தை சந்தித்த இடம் ரங்கம்பாளையம். அங்கு மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடம் அருகே ரங்கன்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் பணிகளை பார்வையிட்டு, பணியாளர்களிடம் அதுபற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். அவர் வந்த தகவல் அறிந்து ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் பலரும் அங்கு வந்து தங்கள் பகுதிக்கு தேவையான சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மூத்த மகள்
மக்கள் பணியின் இடைவேளையில் குடும்பம், அரசியல், பதவி குறித்து அவருடனான உரையாடல் வருமாறு:-
நான் ரங்கம்பாளையம் ஓடைக்காட்டுவலசு பகுதியில் பிறந்தேன். எனது தந்தை மோகன், தாயார் கனகலட்சுமி. இவர்களின் முதல் மகள் நான். எனக்கு பிறகு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். எனது 8 வயதில் தந்தை மோகன் காலமானார். அப்போது எனது கடைசி தங்கைக்கு ஒரு வயது. 4 பெண் குழந்தைகளுடன் தனியாக நின்ற எனது தாய் கனகலட்சுமி எங்களை அழைத்துக்கொண்டு ரெட்டைப்பாளி வலசில் உள்ள அம்மாயி (பாட்டி) நல்லம்மாள், தாத்தா பொங்கியண்ணன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். நாங்கள் அங்கேதான் வளர்ந்தோம். இடையில் சில காலம் எங்கள் படிப்புக்காக சூரம்பட்டியில் உள்ள தாய்மாமா வீட்டுக்கு சென்றோம்.
காலங்கள் விரைந்து ஓட, நான் வளர்ந்தேன். தாத்தாவும் பாட்டியும் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் பார்த்த வரன்தான் எனது கணவர் சுப்பிரமணியம். அப்போதே அவர் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வந்தார். 1985-ம் ஆண்டு இறுதியில் எங்கள் திருமணம் நடந்தது.
பிரசாரம்
இந்த நிலையில் 1986-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காசிபாளையம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் எனது கணவர் போட்டியிட்டார். அதில் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தலில் வெற்றி இல்லை என்றாலும், அவரது கட்சிப்பணி தீவிரம் அடைந்தது. அவர் முழு நேர கட்சிப்பணியை தொடங்கினார். அதே நேரம் பொருளாதார ரீதியாக பாதிப்பு அடையத்தொடங்கியது. சொந்த கைத்தறிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அதை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டோம். 10 ஏக்கர் வயலை குத்தகைக்கு எடுத்து, நெல் நடவு செய்தோம். நான் காலை நேரத்தில் நடவு, களை எடுத்தல் வேலை செய்வேன். இரவில் தண்ணீர் கட்ட, பாதுகாப்பு பணியில் ஈடுபட அவர் செல்வார். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறுவடையில் விளைச்சல் கிடைத்தது.
வயல் விளைச்சல் மட்டுமல்ல, அவரது அரசியல் பயணமும் மகிழ்ச்சிக்கு உரியதாக மாறும் தருணமாக அது அமைந்தது. 1996-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி, காசிபாளையம் 3-ம் நிலை நகராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவாய்ப்பு அளித்தார். அவர் போட்டியில் இருந்ததால் காலையிலேயே எழுந்து பிரசாரத்துக்கு சென்று விடுவார். நான் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர், எனது தங்கைகள் உள்பட குடும்பத்தினருடன் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு பிரசாரம் செய்வேன். அந்த தேர்தலில் அவர் தலைவராக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3 முறை அவர்தான் தலைவராக இருந்தார். பதவி அவரிடம் இருந்தது. நான் வீட்டை கவனித்து வந்தேன். தேர்தல் வரும்போதெல்லாம் குடும்ப பணியைவிட எனக்கும் அரசியல் பணிதான் முக்கியமானதாக இருந்தது.
மேயர்
இந்த முறை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாகவே மேயர் பதவிக்கு எனது கணவர் சுப்பிரமணியம் வருவார் என்று வீட்டுக்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் பலரும் கூறினர். ஆனால், மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதே அவர், என்னிடம் நீ மேயர் தேர்தலுக்கு தயாராக இரு என்று கூறினார். அவர் அரசியல் பணிகளை பார்க்கும்போது, நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். அவர்செய்யும் பணிகள் முழுமையாக எனக்கு தெரியும். ஆனால் நான் மற்றவர்களிடம் அதை வெளிப்படுத்தியது இல்லை.
ஒரு வழியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எனக்கு வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். நமது அமைச்சர் சு.முத்துசாமி எனக்கு ஊக்கம் அளித்தார். 50-வது வார்டு ஏற்கனவே காசிபாளையம் நகராட்சியில் இருந்த பகுதி என்பதால் மக்கள் அனைவரும் எனக்கு பரிச்சயமானவர்கள். என் மீதும் எனது கணவர் மீதும் நம்பிக்கை வைத்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் சிறந்த ஆட்சியின் பொருட்டும், அமைச்சர் சு.முத்துசாமி மீது மக்கள் வைத்திருக்கும் அன்பாலும் நான் வெற்றி பெற்றேன். அத்துடன் எனக்கு மேயர் என்ற பதவியையும் அளித்தார்கள்.
தைரியம்
இது பதவி அல்ல, மிகப்பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்தேன். நான் கூட்டத்துக்கு செல்லும்போதெல்லாம் எனது கணவர்தான் பயந்து கொண்டே இருப்பார். எப்படி பேசப்போகிறாய்... கவனமாக இரு என்று அறிவுரை கூறுவார். அதெல்லாம் 2 கூட்டங்கள்தான். இப்போதெல்லாம் நான் அலுவலக பணிகளுக்கு கணவர் உள்பட யாரையும் எதிர்பார்ப்பது இல்லை. மக்கள் நேரடியாக என்னிடம் பேசுகிறார்கள். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கவுன்சிலர்களுக்கு அறிவுரையும், அதிகாரிகளுக்கு உத்தரவும் இடுகிறேன்.
நான் அடிப்படையில் ஒரு குடும்ப தலைவி. நான் சாலையில் செல்கிறபோதெல்லாம், இந்த ஊர் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திப்பேன். வீடுதோறும் குடிதண்ணீர் சரியாக கிடைக்க வேண்டும். வீதிகளில் தெருவிளக்குகள் முழுமையாக இருக்க வேண்டும். சுத்தமான சாக்கடை வசதி வேண்டும். சாலைகள் குண்டும்-குழியுமாக இல்லாத நிலை வேண்டும் என்று நினைப்பேன். இப்போது அந்த கனவை நிறைவேற்றும் பொறுப்பு என்னிடம் இருக்கிறது. எனது ஆசையை நிறைவேற்றும்போது, ஈரோடு மாநகராட்சி முழுமையும் மிகச்சிறந்த அடிப்படை வசதிகள் பெற்ற மாநகரமாக மாறும். இதற்கான நடவடிக்கையை தொடங்கி இருக்கிறேன். தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள்தான் நமது மாநகராட்சியை சுத்தமாக வைக்க நமக்கு உதவிகரமாக இருப்பவர்கள். அவர்களின் கோரிக்கைகளில் இருக்கும் நியாயங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறுவோம்.
அடிப்படை வசதிகள்
மாநகராட்சியின் அனைத்து திட்டங்கள் குறித்தும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். கவுன்சிலர்கள் கோரிக்கைகளை கூட தனியார் ஒப்பந்ததாரர்கள் கேட்பதில்லை என்ற புகார் இருந்தது. அதை பேசி சரி செய்து, இப்போது பணிகளை விரைவு படுத்தி இருக்கிறோம். பாதாள சாக்கடை பணிகள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும். உடனடியாக சாலைகள் புதுப்பிக்கப்படும். தெருவிளக்குகள் மிக விரைவில் முழுமையாக பொருத்தப்படும். ஈரோடு மாநகராட்சி முழுமையான அடிப்படை வசதிகள் கொண்ட நகரமாக மாறும்.
நான் பொதுமக்களை சந்திக்கும் போது பெரும்பாலான மூதாட்டிகள் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் அளிக்கிறார்கள். அவர்களை பார்த்தாலே ஏழ்மை நிலையில் இருப்பது தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதில் இருக்கும் தடங்கல்களை தீர்த்து ஒரு மாதத்துக்குள் உதவித்தொகை கிடைக்கச்செய்ய அதிகாரிகளிடம் பேசிஇருக்கிறேன். இதுபோல் கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கப்படும் விதவை உதவித்தொகையை எந்த காரணமும் கூறி தள்ளுபடி செய்து விடாமல் ஒரு மாத காலத்துக்குள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கூறி இருக்கிறேன். முதியோர்களும், கணவனை இழந்த பெண்களும் இந்த சமூகத்தில் வாழ்க்கை நடத்த பணம் மிகவும் முக்கியம். ரூ.1000 என்பது வசதியானவர்களுக்கு சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால், இல்லாதவர்களுக்குத்தான் அந்த தொகை எத்தனை பெரியது என்று தெரியும். இதுபோல் ஈரோடு மாநகராட்சியில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்த அதிக அக்கறை செலுத்துவேன்.
பேச்சை விட செயல் முக்கியம்
நான் பேசுவதை விட எனது செயல்பாடுகள் காலம் கடந்தும் பேசும். என்னைப்பற்றி நான் பேசுவதை விட மக்கள் நான் என்ன செய்து இருக்கிறேன் என்று பேசுவார்கள். உறுதிமொழியை வார்த்தைகளாக கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. செய்து காட்டுவதே எனது விருப்பம். அடிப்படை வசதியில் நிறைவு பெற்ற ஒரு மாநகராட்சியாக ஈரோடு மாறும்.
அரசியல் எனக்கு புதிது அல்ல. நான் அரசியல் தெரியாதவளும் அல்ல. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் சு.முத்துசாமியும் எங்களுக்கு முன்பு நடத்தி எங்களை வழிநடத்துகிறார்கள். அவர்களின் வழியில் எனது பயணம் அமையும்.
இவ்வாறு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கூறினார்.