காட்பாடியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்

காட்பாடி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2022-12-07 17:39 GMT

காட்பாடி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

நீர்வளத் துறை சார்பில் காட்பாடி தாலுகா கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரிகளை ரூ.28.45 கோடியில் புனரமைக்கும் பணி, வள்ளிமலை ஏரி, முத்தரசி குப்பம் ஏரி மற்றும் தெற்கு பிரதான கால்வாய் ரூ.62 லட்சத்தில் புனரமைக்கும் பணி, அரும்பருத்தி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியிலும், குகையநல்லூர் கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியிலும் தடுப்பணை அமைக்கும் பணி, குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றின் இருபுறமும் ரூ.2.98 கோடியில் வெள்ள தடுப்பு கரை அமைக்கும் பணி, ஆற்காடு தாலுகா திருப்பாற்கடல்- வளவனூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.47.87 கோடியில் தடுப்பணை, வாணியம்பாடி தாலுகாவில் உள்ள சரஸ்வதி ஆற்றினை கொத்தூர் கிராமம் முதல் கல்லாற்றில் இணையும் வரை ரூ.9.94 கோடியில் புனரமைக்கும் பணி, ஆம்பூர் தாலுகா நரியம்பட்டு கிராமம் அருகே மலட்டாற்றின் குறுக்கே ரூ11.83 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி என 8 பணிகளுக்கு ரூ.139.21 கோடியில் அடிக்கல் நாட்டு விழா காட்பாடி கழிஞ்சூர் ஜோதி நகரில் நேற்று நடந்தது.

விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மேல்அரசம்பட்டு அணை, சதுப்பேரியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம் ஆகியவை வருகிற நிதி ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும். ஆற்காட்டில் ஒரு பெரிய கால்வாய் பணியை நான் தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தேன். அது தற்போது நின்றுள்ளது. அந்த பணியும் வருகிற நிதி ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும். கழிஞ்சூர் ஏரி அருகே பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு காட்பாடி தாலுகாவில் மாற்று இடம் வழங்க கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன். வருகிற 10 நாட்களுக்குள் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு அதன் பின்னர் தான் அங்குள்ள வீடுகளை இடிக்க வேண்டும்.

சுற்றுலா தலமாக்கப்படும்

காட்பாடி கழிஞ்சூர் ஏரி சுற்றுலாத்தலமாக்கப்பட்டு அதில் படகு சவாரி விடப்படும். ஏரிக்கரைகள் அகலப்படுத்தப்பட்டு மக்கள் நடை பயிற்சி செல்லும் வகையில் நடை பாதைகள் அமைக்கப்படும். ஏரியின் நடுவே செயற்கை தீவு உண்டாக்கி அங்கு மரங்கள் நடப்படும். கழிஞ்சூர் ஏரியில் வேலூர் மாநகராட்சி குப்பை லாரிகள் குப்பைகளை கொட்டி செல்கிறது. அவ்வாறு குப்பை லாரிகள் வந்தால் அதனை பொதுமக்கள் மடக்கி பிடித்து எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும.

பொன்னையாற்றின் குறுக்கே இதேபோல் தான் தனியார் நிறுவனத்தின் கழிவுகள் கொட்டப்பட்டது. இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக கைது செய்யப்படுவார்கள்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 300 ஏரிகள் தூர்வாரியதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் ஒரு ஏரியைக் கூட தூர்வாரவில்லை. அந்த பணம் எங்கே போனது என தெரியவில்லை. அதனால் தான் இப்போது 5 ஏரி, 10 ஏரி என புனரமைக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.

தன்னிறைவு பெற்ற தொகுதியாக

மோர்தானா அணையை அப்போது கட்டியதால் இப்போது லத்தேரி வரை நீர்ப்பாசனம் பெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் காட்பாடி தொகுதியில் விரைவில் பெரிய சிப்காட் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைய உள்ளது. ஏற்கனவே காட்பாடி தாலுகாவுக்கு அரசு கலைக் கல்லூரி, மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

இவ்வளவு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ., க்கள் ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன், ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் நரசிம்மன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் டீட்டா சரவணன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்