உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-07-03 22:44 GMT

நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டை மேட்டில் நேற்று தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்களாட்சியின் உயிர்நாடி

உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். மக்கள் பணியில் முதல் படி என்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். அந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றுவதற்கான பயிற்சியைப் பெற முடியும்.

நான் எனது வாழ்நாளில் எத்தனையோ மாநாடுகளில் பங்கெடுத்து பேசி இருந்தாலும், பெருமையோடு சொல்கிறேன். நான் முதல்-அமைச்சராக கலந்துகொள்ளும் முதல் மாநாடு, இந்த உள்ளாட்சி மாநாடு. மிகமிகச் சிறுவயதில், ஆழமான அரசியல் கருத்துகளை உள்வாங்கி, தலைவர் கருணாநிதி வழியில் இயக்கத்துக்காக என்னை நானே ஒப்படைத்துக்கொண்டேன்.


அரசியல் ஆர்வம்

பள்ளி பருவமாக இருந்தாலும், கல்லூரி காலமாக இருந்தாலும், பள்ளி படிப்பைவிட இயக்கமே நமது வாழ்க்கை என்று நினைத்து, நான் செயல்பட்டு வந்தேன். ஆனால் தலைவர் கருணாநிதி, "படி… படி… படி…" என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.

பள்ளி படிப்பை விட அரசியல் படிப்புதான் எனக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. அரசியல் ஆர்வம் என்பது பதவிக்கு வரவேண்டும், மாலை மரியாதைகள் வர வேண்டும் என்பதற்காக அல்ல. மக்கள் பணியாற்ற வேண்டும், இந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முடிவுக்கு வந்தேன்.

மிசா கைதி

அப்படி நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல. பாராட்டுகள் அல்ல. மலர் மாலைகள் அல்ல. சிறைச்சாலைகள்தான் எனக்கு கிடைத்தது. சித்ரவதைகளைத்தான் நான் அனுபவித்தேன். துன்ப துயரங்கள் என்னை வரவேற்றன.

திருமணமான ஐந்தே மாதகாலத்தில் மனைவியைப் பிரிந்து ஓராண்டு காலம் மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டேன். தி.மு.க.வை விட்டு விலகுகிறேன் என்று எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்வதாகக்கூட அப்போது சிறையில் சொல்லப்பட்டது. அப்படி எழுதிக்கொடுக்க மறுத்தவன் மட்டுமல்ல, மற்றவர்களிடமும், அப்படி எழுதிக்கொடுக்கக்கூடாது என்று சொன்னவன்தான் நான்.

பொறுப்புகள் உடனே கிடைக்காது

ஓராண்டு காலம் சிறையில் கழித்துவிட்டு வெளியே வந்த நான், இன்னும் கூடுதல் கொள்கை பலத்தோடு-உரத்தோடுதான் இருந்தேன். நான் சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டு 1977. முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த ஆண்டு 1989. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்குள் நான் அடியெடுத்து வைக்க 12 ஆண்டுகள் பிடித்தது.

இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால், பொறுப்புகள் உடனடியாக கிடைத்துவிடாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் பேரியக்கம் நம்முடைய தி.மு.க. இங்கு பொறுப்புகள் என்பது சில ஆயிரம் பேருக்குத்தான் கிடைக்கும்.

கையெழுத்தின் வலிமை

அப்படி பொறுப்பு கிடைத்தால், அந்த பொறுப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம். அதனை எப்படி தக்கவைக்கிறோம் என்பதுதான் மிகமிக முக்கியம். பதவிகளுக்கோ, பொறுப்புகளுக்கோ வருவது முக்கியமல்ல, அதனைத் தக்கவைத்துக்கொள்வதுதான்முக்கியமானது.

உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும் புவது இதுதான், பொறுப்புக்கு வந்த அனைவரும் அதை பொறுப்போடு பயன்படுத்துங் கள். முதலில் உங்கள் கையெழுத்தின் வலிமையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில், நீங்கள் தவறு செய்தால் உங்களை விட்டு மக்கள் விலகுவார்கள். விலகுவது மட்டுமல்ல, முக்கியமாக உங்களை புறக்கணிப்பார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

மாநாட்டின் நோக்கம்

மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை- அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்த மாநாட்டின் அடிப்படையான நோக்கமே இதுதான்.

புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் பெண்களுக்கு பயமோ, கூச்சமோ, தயக்கமோ இருக்கக்கூடாது. பெறப்பட்ட பொறுப்பை நீங்களே நேரிடையாக கையாள வேண்டும். உங்களுக்கு தரப்பட்ட பொறுப்பை, உங்கள் கணவரிடத்தில் நீங்கள் ஒப்படைத்து விடாதீர்கள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர்களாக நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

சட்ட ரீதியான நடவடிக்கை

உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி, மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதே தி.மு.க. என்ற இயக்கத்தின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்துவிடக்கூடாது. யாரோ ஒருசிலரின் தவறான செய்கையின் காரணமாக, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரான நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் அவமானத்தால் தலைகுனியும் நிலையை யாரும் உருவாக்கிவிடக்கூடாது. மக்களின் பாராட்டைப் பெறுங்கள். தி.மு.க.வுக்கும், தமிழகத்துக்கும் பெருமைகளைப் பெற்றுத்தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா, திருச்சி மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்