நடிகை திவ்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் நடிகர் அரணவ் பேட்டி

நடிகை திவ்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என சின்னத்திரை நடிகர் அரணவ் தெரிவித்தார்.

Update: 2022-10-07 22:54 GMT

பூந்தமல்லி,

'செவ்வந்தி' என்னும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் நடித்து வரும் நடிகர் அரணவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில் மனைவி திவ்யாவை தான் தாக்கவில்லை. அவர்தான், அவரது நண்பருடன் சேர்ந்து இதுபோல் கருவை கலைக்க நாடகமாடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அரணவ் புகார் அளித்தார். அது தொடர்பாக போரூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் இரவு அரணவ்விடம் 4 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று நிருபர்களிடம் நடிகர் அரணவ் கூறியதாவது:-

திருமண புகைப்படம்

கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'செல்லம்மா' என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமானேன். அதில் எனக்கு கதாநாயகியாக சின்னத்திரை நடிகை ஒருவர் நடித்தார். நாங்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யாவுக்கு எங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதன் பிறகு தான் அவர், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என வற்புறுத்தினார். திவ்யாவின் விருப்பத்துக்கு ஏற்ப பெற்றோருக்கு தெரியாமல் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை இஸ்லாமிய மதத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடக்கூடாது என கூறினேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் எங்கள் மீது இருந்த சந்தேகம் அதிகரித்ததால் சில நேரங்களில் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து திவ்யா தகராறு செய்தார். இதற்காக அவரையும், படபிடிப்பில் உள்ள மற்றவர்களையும் சமாதானம் செய்து, மன்னிப்பு கேட்டு உள்ளேன்.

சேர்ந்து வாழ விருப்பம்

திவ்யா அடிக்கடி வீட்டில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தாலியை கழற்றி வைத்து, கடிதம் எழுதி வைப்பது, கைகளை அறுத்து கொள்வது என பல விதங்களில் என்னை மிரட்டினார்.

அத்துடன் எனது பேச்சை மீறி இந்து முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதனை நீக்குமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக கூறி அவரது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருந்தார்.

திருமணத்தின்போது இருவருக்கும் நெற்றியில் பொட்டு, முகத்தில் சந்தனம் தடவியது போன்ற புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதால் எனது வீட்டில் பிரச்சினை வெடித்தது. இதனால் எங்களுக்குள் பிரச்சினை அதிகமானது.

மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அது தெரிந்தும் திவ்யாவுடன் சேர்ந்து வாழ தொடங்கினேன். தினமும் என்னை மன ரீதியாக துன்புறுத்தினார். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடிகை திவ்யா உடன் நான் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் கமிஷனரிடம் திவ்யா புகார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடிகை திவ்யா, நேற்று முன்தினம் இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கணவர் மற்றும் சின்னத்திரை நடிகை ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது கணவர் அரணவ், அவருடன் நடிக்கும் சின்னத்திரை நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதுகுறித்து நான் கேட்டபோது, அந்த பெண் தண்ணீர் பாட்டிலால் என்னை அடித்ததில் எனது வயிற்றில் பட்டுவிட்டது. இதனால்தான் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அந்த நடிகையுடன் அவர் அடிக்கடி செல்போனில் பேசி வருகிறார். இதனை தட்டிக்கேட்டதால் அரணவ் என்னை தாக்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் நடிகர் அரணவ் அளித்த புகார் தொடர்பாக திவ்யாவிடம் விசாரணை செய்ய போலீசார் அணுகியபோது, தான் இப்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், தனது வக்கீல்கள் வந்தவுடன் அவர்களுடன் விசாரணைக்கு ஆஜராக வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் போலீசார் திவ்யாவின் வீட்டுக்கு வந்து விசாரிக்கலாமா? என கேட்டபோது, அதற்கும் அவர் வேண்டாம் என மறுத்ததுடன், உரிய நேரத்தில் தானே விசாரணைக்கு ஆஜராகுவதாகவும் கூறியதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்