கூடலூரில் பரபரப்பு:2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

கூடலூரில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளில் பூட்டுகளை உடைத்துதிருட முயன்ற ஆசாமியின் உருவத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-12 12:47 GMT

கூடலூர்

கூடலூரில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளில் பூட்டுகளை உடைத்துதிருட முயன்ற ஆசாமியின் உருவத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

2 வீடுகளின் பூட்டு உடைப்பு

கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ஒரு வாரமாக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பந்தலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீடுகளுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டனர். ஆனால் நகை பணம் எதுவும் திருட்டு போகவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மர்ம ஆசாமியின் புகைப்படம் வெளியீடு

தொடர்ந்து போலீசார் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிடுவதை கண்டனர். தொடர்ந்து பூட்டுகள் உடைத்த வீடுகளுக்குள் சென்று வருவதை பார்த்தனர். இந்த வீடியோ காட்சியை பொதுமக்களுக்கு வெளியீடு செய்து குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ஒரு வீட்டின் உரிமையாளர் துபாயில் உள்ளார். இதனால் அவர் பெயர் விபரம் தெரியவில்லை. மற்றொருவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதால் 2 வீடுகளும் பூட்டி கிடப்பதை உறுதி செய்த அடையாளம் தெரியாத ஆசாமி பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இருப்பினும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்த நபரின் உருவத்தை வைத்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் குற்றவாளி குறித்து அடையாளம் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்