கணவர் 'யூடியூப்' பார்த்து பிரசவம்; குழந்தை பெற்ற பெண் சாவு
‘யூடியூப்’ பார்த்து கணவர் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பெற்ற பெண் பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27). இவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகிக்கும் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன்- மனைவி இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்கள். இந்த நிலையில் லோகநாயகி கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான லோகநாயகி, கணவரிடம் வீட்டிலேயே அதுவும் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
'யூடியூப்' பார்த்து பிரசவம்
அதன்படி இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது? என்பது குறித்து கணவன்-மனைவி இருவரும் 'யூடியூப்' மூலம் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே இருவரும் பேசிக்கொண்டபடி 'யூடியூப்' பார்த்து மாதேஷ் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது திடீரென அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானது. சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்ற லோகநாயகியை போச்சம்பள்ளியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகநாயகி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாதேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.