கணவன் - மனைவி வெட்டிக்கொலை ; மகளின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
சென்னையில் கணவன் - மனைவியை மகளின் கள்ளக்காதலன் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50), பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (45). இந்த தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதில் மகள் வசந்திக்கும் அவரது கணவர் சம்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்தி கடந்த 5 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வசந்திக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இதனிடையே, வசந்திக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் (35) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை எடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு மோசஸ் அடிக்கடி வசந்தியின் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து வந்துள்ளார். இவர்களது பழக்கம் குறித்து வசந்தியின் பெற்றோர்களுக்கும் தெரியும் என கூறப்படுகிறது.
வசந்தியுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்த வேண்டும் என திட்டமிட்ட மோசஸ் அதே பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகை எடுத்து தனியாக வசித்து வந்ததார். மோசஸ் மது அருந்திவிட்டு அடிக்கடி வசந்தியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால், கடந்த 30ம் தேதி வசந்தி அவரது குழந்தைகளோடு மாங்காடு பகுதியில் உள்ள அவரது சகோதரி அமுலு வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு மோசஸ் வசந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வா வரவில்லை என்றால் உனது பெற்றோர்களை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.ஆனால் வசந்தி வரவில்லை.
இந்த நிலையில் மோசஸ் வசந்தியின் பெற்றோர்களை புது வீட்டிற்கு அழைத்துள்ளார். மோசஸ் உடன் அடிக்கடி சேர்ந்து மது அருந்தும் பழக்கத்தை கொண்டதால் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் மோசஸ் வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டிற்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி, 2ம் தேதி என இரண்டு நாட்களாக வசந்தி தனது பெற்றோர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர்கள் போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த வசந்தி அவரது சகோதரர் ராஜேஷுக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி நேற்று இரவு ராஜேஷ், மோசஸ் வாடகைக்கு எடுத்திருந்த புதிய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோருக்கு தலை, கழுத்து, முகம், தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். = போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர.
முதல்கட்ட விசாரணையில் கண்காணிப்பு கேமரா காட்சியில் சம்பவம் நடைபெற்ற கடந்த 30ம் தேதி அன்று இரவு மோசஸ் மற்றும் மற்றொரு நபர் என இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதனை அடுத்து அந்த இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.