மினி லாரி மோதி கணவன்-மனைவி பலி

மகுடஞ்சாவடியில் மினி லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு தீபம் ஏற்ற சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-12-06 19:30 GMT

இளம்பிள்ளை:-

மகுடஞ்சாவடியில் மினி லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு தீபம் ஏற்ற சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கணவன்-மனைவி

இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி வேலகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). தறித் தொழிலாளி. இவருடைய மனைவி சூரியகலா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முருகேசன் தனது மனைவி சூரியகலாவுடன் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி வைகுந்தம் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட முடிவு செய்தனர். இதன்படி நேற்று மாலை அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வைகுந்தம் பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.

2 பேர் பலி

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்பால இறக்கத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பின்னால் அரியானூரில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற மினி லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன், சூரியகலா ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கணவன், மனைவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே முருகேசன், சூரியகலா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்து ஏற்பட்டதும் மினி லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

சோகம்

இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு தீபம் ஏற்ற சென்ற கணவன்-மனைவி மினி லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்