கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
6 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 34). இவர், திருவள்ளூர் மாவட்டம் திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனம்பட்டு மதுரை வீரன் தெருவை சேர்ந்த நித்யா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஹேம்நாத் என்ற ஒரு மகன் இருந்தார்.
கலையரசன் கேட்டரிங் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி நித்யா மற்றும் மகன் ஹேம்நாத்துடன் வாசனம்பட்டு கிராமத்தில் உள்ள தனது மாமனார் லோகநாதன் வீட்டுக்கு வந்து தங்கினார். வீட்டின் மேல் தளத்தில் லோகநாதன் மற்றும் அவரது உறவினர் சந்தியப்பன் ஆகியோரும், தரைதளத்தில் கலையரசன், நித்யா, ஹேம்நாத் ஆகியோரும் தங்கி இருந்தனர்.
மகனை கொன்று விட்டு...
நேற்று முன்தினம் இரவு கலையரசன் குடும்பத்துடன் ஒரே அறையில் தூங்க சென்றார். நேற்று காலை சந்தியப்பன், கீழே வந்து பார்த்தபோது படுக்கை அறையில் ஹேம்நாத் பிணமாக கிடப்பதையும், அருகில் உள்ள ஜன்னலில் கலையரசனும், நித்யாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மப்பேடு போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறு காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.