வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-10-17 22:07 GMT

கடம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாட்டு துப்பாக்கி

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த ஏரியூர் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றை கடம்பூர் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்தவர்கள் யார்? எதற்காக பதுக்கி வைத்தனர்? என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்த தோட்ட பகுதிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்து உள்ளதாக நேற்று முன்தினம் இரவு கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கைது

இதைத்தொடர்ந்து தோட்டத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒருவர் தப்பிவிட்டார். இதைத்தொடர்ந்து பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தண்ணீர்பந்தல் தோட்டம் பகுதியை சேர்ந்த வேட்டையன் (வயது 62), கடம்பூர் மல்லியம் துர்க்கம் பகுதியை சேர்ந்த ராமர் (39) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட ேதாட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நாட்டு துப்பாக்கியை எடுக்க வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய குட்டியப்பன் மற்றும் இதில் தொடர்புடைய கே.என்.பாளையத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்